ஹிஜாப் தடையும் முஸ்லிம் பெண்களின் எதிர்காலமும்! – அருள்ராஜ்

Share

இஸ்லாமியப் பெற்றோருக்குப் பிறந்ததால் மட்டுமே இஸ்லாமியராகிப்போனவர்களே இந்தியாவில் அதிகம். இஸ்லாமியக் கொள்கைக்கு எதிராக ஊர்தோறும் தர்ஹாக்கள் நிறைந்திருப்பதே இதற்குச் சாட்சி. இந்த லட்சணத்தில் இந்திய அரசியல்வாதிகளுக்கும், இஸ்லாமிய எதிர்ப்பு மனோபாவம்கொண்ட மேல்தட்டு வர்க்க நீதிபதிகளுக்கும் இஸ்லாத்தைப்பற்றி என்னவிதமான புரிதல் இருந்துவிடப் போகிறது?

ஹிஜாப்பை பற்றிய அடிப்படைப் புரிதலே நம் நாட்டில் இல்லை. இயற்கையின் படைப்பில் ஆணும் பெண்ணும் எதிர்பாலின ஈர்ப்புடனேயே படைக்கப் பட்டுள்ளனர்.

எவ்வளவு பெரிய அப்பா டக்கர் மனிதனாக இருந்தாலும் அரைகுறையான ஆடையுடன் இருக்கும் பெண்ணின் அங்க அசைவுகளைக் காணும்போது இயற்கையாகவே அவனுக்குள் ஒருவிதமான வேதியியல் மாற்றம் உருவாகும். ஒரு பெண் அரைகுறை ஆடையுடனோ அல்லது நளினமாகவோ நடந்து செல்லும்போது அவளைக் காணும் எந்தவொரு ஆணுக்குள்ளும் சிறிய சபலம் ஏற்படும். அவ்வாறு ஏற்படாமல் போகும் பட்சத்தில் அவனுக்குள் ஏதோ பிரச்சனை உள்ளது என்றே அர்த்தம்.

ஆணின் மனது அலைபாய்ந்தாலும் அவனது புத்தி கட்டுக்கோப்பாக செயல்படுவதால் மட்டுமே மனித இனத்தில் மட்டும் இன்றையச் சமூக ஒழுங்கு பேணப்படுகிறது. மனதின் எண்ணங்கள் புத்தியின் கட்டுப்பாட்டிற்குள் வராமல் போகுமாயின் மனித வாழ்விற்கும் தெரு நாய்க்கும் பெரிய வித்தியாசம் இருந்திருக்காது.

ஒரு பெண்ணின் இயற்கையான உடலமைப்பும், நளினங்களும் அவளைக் காணும் ஆணின் மனதிற்குள் சபலத்தை ஏற்படுத்தாத வகையில் கண்ணியமான முறையில் அணிந்துகொள்ளும் உடையின் பெயர்தான் ஹிஜாப். அந்த உடை கருப்பாகவோ சிவப்பாகவோ வெள்ளையாகவோ இருக்கவேண்டும் என்ற நிர்பந்தம் எதுவும் கிடையாது. ஒரு இந்துப் பெண்ணோ அல்லது கிறித்தவப் பெண்ணோ தன் அறையில் தன் கடவுளை வணங்க விரும்பினால் அவர் அப்போது உடுத்தியிருக்கும் உடையிலேயே வணங்க முடியும்.

ஆனால் ஒரு இஸ்லாமியப்பெண் தனியறையிலோ அல்லது பொது வெளியிலோ இஸ்லாமிய முறைப்படி தொழுகை செய்ய விரும்பினால் ஹிஜாப் எனும் கண்ணியமான உடையை அணிந்துகொண்டு மட்டுமே தொழ வேண்டும் என்பது இஸ்லாத்தின் கட்டளை. அவ்வாறான உடை அணியாமல் தொழுதால் அந்த தொழுகை இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படாது என்பது அவர்களின் நம்பிக்கை.

இதிலிருந்தே ஹிஜாப் என்பது இஸ்லாமியப் பெண்களின் வாழ்வியலோடு உணர்வு ரீதியாக கலந்த விடயம் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். உதாரணத்திற்குச் சொல்ல வேண்டுமென்றால் நமக்கெல்லாம் நன்கு பரிட்சயமான பர்வீன் சுல்தானா எனும் பேராசிரியை அவர்கள், பொதுவெளியில் நம் தமிழ்க் கலாச்சாரப்படி சேலை அணிந்து கொண்டுதான் வருகிறார். ஆனாலும் அவர் இறைவனைத் தொழ விரும்பினால் ஹிஜாப் அணிந்துகொண்டுதான் தொழுகை செய்வார். அவ்வாறுதான் தொழவேண்டும் என்பது அவருக்கும் தெரியும். இஸ்லாத்தின் கட்டளையை யாரும் மீற முடியாது.

ஹிஜாப் விடயம் இவ்வளவு தெளிவாக இஸ்லாத்தில் சொல்லப்பட்டிருந்தும் இந்த விடயத்தில் தீர்ப்பு சொன்ன கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு இந்த விவரம் எதுவுமே தெரியவில்லை. மதசார்பற்ற நாடாக பீற்றிக்கொள்ளும் இந்தியாவில் ஒரு மதம் சார்ந்த பிரச்சனைகளுக்கு அந்த மதத்தின் அடிப்படைகூடத் தெரியாத பிற மத நம்பிக்கை உள்ள நீதிபதிகள் தீர்ப்பு சொல்வதெல்லாம் உச்சக்கட்ட அய்யோக்கியத்தனம்.

எந்த வழக்கை எப்படி அணுகவேண்டும் என்ற அடிப்படைப் புரிதல்கூட பல நீதிமன்றங்களுக்கே இருப்பதில்லை என்பது அண்மைக்கால நீதிமன்ற நிகழ்வுகளில் அப்பட்டமாகத் தெரிகிறது. ஒரே அரசியல் சட்டப்புத்தகத்தைப் படித்து பதவிக்கு வந்த மூவரில் ஒருவரான நீதிபதி குன்ஹா என்பவர் ஜெயலலிதாவிற்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை கொடுக்கிறார்.

இரண்டாமவரான குமாரசாமி அவரைக் குற்றமற்றவர் என்று சொல்லி விடுதலை செய்கிறார். கடைசியாக உச்சநீதிமன்றம் முதலாமவர் கொடுத்த தீர்ப்பை உறுதி செய்கிறது. நீதிமன்றங்களின் பெயரில் இங்கே கொடுக்கப்படுதெல்லாம் தீர்ப்புகள் மட்டுமே. நீதி அல்ல.

கர்நாடகாவில் முதலில் பள்ளிகளில் ஹிஜாப் அணியத் தடை என்றனர். பிறகு இந்துக் கோவில் விழாக்களில் இஸ்லாமியர்கள் வியாபாரம் செய்யத் தடை என்றனர். மூன்றாவதாக ஒலிபெருக்கி மூலம் பள்ளிவாசல்களில் பாங்கு சொல்லத் தடை போட்டுள்ளார்கள்.

கேரளாவில் நடந்த ஒரு இந்துமத ஆலய நிகழ்ச்சியில் நடனம் ஆடச்சென்ற இஸ்லாமியப் பெண் கலைஞரை விரட்டி அடித்துள்ளனர் இந்துத்துவ வாதிகள்.

இதே நிலை தொடர்ந்து நீடித்தால் அடுத்த கட்டமாக ஷாப்பிங் மால்களுக்குள் ஹிஜாப் அணியத் தடை போடுவார்கள். பிறகு ரோட்டிலும் போடக்கூடாதென்பார்கள். படிப்படியாக அவர்களை ஒடுக்குவதைவிட பாஜக ஆளும் நாட்டில் இஸ்லாமியர்கள் இரண்டாம் தரக் குடிமக்களாகவே நடத்தப்படுவார்கள் என்று வெளிப்படையாக அறிவித்து விடுங்களேன்… வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட மதசார்பற்ற நாடு என்ற போலியான பிம்பத்தை ஏன் உலகிற்கு கட்டமைக்கிறீர்கள்?

கல்வி விவசாயம் வேலைவாய்ப்பு பொருளாதாரம் விலைவாசி எல்லாம் அதலபாதாளத்தில் இருக்கும்போது அவற்றிலிருந்து மக்களை மடைமாற்ற மதபோதையை ஒவ்வொருவரின் மண்டையிலும் திணிக்கிறது மத்திய அரசு. ஒரு பூனையைக்கூட ஒரு எல்லைக்குமேல் விரட்டினால் ஒரு கட்டத்தில் புலியாகச் சீரும்.

குடிமக்களைப் பிரித்தாலும் சூழ்ச்சியை ஆளும் அரசே முன்னின்று செய்வதெல்லாம் காலம் செய்த கோலம். இதே நிலை நீடிக்குமாயின் அதிகபட்சம் இருபது ஆண்டுகளுக்குள் இந்தியா சிதறுண்டு போவதற்கே வாய்ப்புகள் அதிகம்.

இன்று பத்தாம் வகுப்பு பரீட்சை எழுதாத அந்த இருபத்தோறாயிரம் மாணவிகளுக்கும் அதிகபட்சம் ஒரு வருடம் விரயமாகலாம். அடுத்த ஆண்டு அவர்களுக்கு ஏற்ற ஏதோ ஒரு பள்ளியில் சேர்ந்து படிப்பைத் தொடரத்தான் போகிறார்கள். ஆனால் இவ்வாறு ஏற்படும் சமூகப்பிளவு என்பது எதிர்மறையான பின்விளைவுகளை நம் பொதுச் சமூகத்தில் ஏற்படுத்தாமல் போகாது என்பதுமட்டும் நிச்சயம்.

Leave A Reply