5. டாக்டர். டி.எஸ்.எஸ். ராஜன் – TAMIL LEADERS – 6

Share

மதன்லால் திங்ராவின் செயலைத் தீவிர தேச பக்தரும் தலைவருமான விபின் சந்திர பாலரும் கண்டித்தார். (அப்பொழுது அவர் லண்டனில் இருக்கிறார். வருஷம் 1909). மதன்லாலோடு கூட வசித்தவர் டாக்டர் ராஜன். தன்னைத் தூக்கில் போட்டு விடுவார்கள் என்று திங்ராவுக்குத் தெரியும். சாகுமுன் மதன்லால், ராஜனைப் பார்க்க விரும்பினான். ராஜன் மதன்லாலை, சிறையில் பேட்டி கண்டார். இந்தியாவில் இந்தக் கொலை நடந்திருப்பின், ராஜன் அவர்கள் பேரிலும் உடந்தைக் குற்றம் சாட்டப் பெற்று, அவர் உயிர் துறந்திருக்க வேண்டும். ஆனால் இங்கிலாந்து சுதந்திர நாடு. லண்டன் போலீசாருக்கு, குற்றவாளியை மட்டும் கண்டுபிடிக்கும் சாமர்த்தியமும் பொறுப்பும் தான் உண்டு. இதனாலே தான், ராஜனைப்பற்றி இப்பொழுது எழுதக்கூடிய பாக்கியம் எனக்கு ஏற்பட்டது.

யாரோ ஓர் இந்தியன், ஏனைய இந்தியர்களைக் கலக்காமல் ஒரு கொலை செய்துவிட்டால், அதற்காக,
மற்றைய எல்லோரும் பழியை ஏற்றுக்கொண்டு, பயப்படவேண்டும் என்பதுண்டா? சுதந்திரமுள்ள நாடுகளில், இத்தகைய கேவலமான அச்சத்தைக் காணமுடியாது. இந்த அச்சச் சுழலில் அகப்பட்டுக் கொள்ளாமல், ராஜன் எவ்வாறு மதன்லாலைச் சிறையில் பேட்டி கண்டார்? இது உங்களுக்கு அதிசயமாகத் தோன்றுகிறதா? ராஜன் ஆண் மகனாக இருந்தமையால்தான், பேட்டி காணத் துணிவு ஏற்பட்டது. வேறு எந்தக் காரணமும் சொல்லமுடியாது. நெருக்கடியில் தனது இயற்கைத் துணிவைக் காண்பிப்பவன்தான் வீரன்.

ராஜன் தஞ்சாவூர் ஜில்லா, தில்லை ஸ்தானத்தைச் சேர்ந்தவர். அவருடைய தகப்பனார் சேஷய்யங்கார் காலமாகிவிட்டார். ராஜனுக்கு, சௌந்திர ராஜன் என்பது முழுப் பெயர். ராஜன் குடும்பத்தார், அவரது சிறுபிராயத்தில் சீரங்கத்தில் வசித்துவந்தார்கள். ராஜனுடைய பால்யப் படிப்பு என்னவென்று நினைக்கிறீர்கள்? கழுதைச் சவாரி என்றால், நம்பமாட்டீர்களோ?

ஸ்ரீரங்கநாதன் கோயில் மதில்களை அண்டி ஒண்டி படுத்துக்கொண்டு, அல்லது நின்றுகொண்டு இருக்கும் கழுதைகள் சுக்லபட்ச இராக்காலத்தில் (நிலவு இருக்கும் நாட்களில்) பட்டபாட்டைச் சொல்லி முடியாது என்று ராஜன் கதையாக வர்ணிப்பதை, நீங்கள் நேரிலே கேட்டு, ஆனந்தம் அனுபவிக்க வேண்டும். சீரங்கத்திலே பிடித்த சவாரி, திருச்சிக் கோட்டையிலே (சுமார் நான்கு மைல் தூரம்) தான் போய் நிற்குமாம். அவ்வளவு ஜீவதாதும் உடல் உற்சாகமும் நிறைந்தவர் ராஜன்.

கழுதைச் சவாரி செய்த இன்னொருவர் எனக்கு நினைவு வருகிறது. சார்லெஸ் பெரிஸ்போர்டு பிரபு என்ற கடற்படைத் தலைவர், இங்கிலாந்திலே இருந்தார். அவருடைய இளம்பிராயத்திலே, அவரோடு ஒருவர் போட்டி போட்டார். லண்டன் வீதிகள் சிலவற்றில், பலர் அறிய, பெரிஸ்போர்டு கழுதைச் சவாரி செய்தால், ஒரு பவுன் பந்தய மென்றார் நண்பர். பெரிஸ்போர்டு பந்தயத்தை ஏற்று, அதில் ஜயித்து, பவுனைப் பெற்றதுமல்லாமல், ஆங்கில சாம்ராஜ்யத்தின் கடற்படைகளுக்கும் தலைவரானார். விளையும் பயிர் முளையிலே.

பொய்க்கௌரவம் பாராட்டாதவர்கள், இறுதியில் உண்மையான கௌரவத்தை அடைகிறார்கள். இதற்கு ராஜன் சிறந்த அத்தாட்சி. பார்வைக்கு, ராஜன் கரடுமுரடு தட்டிய கிராமத்தான் போலக் காணப்படுவார் என்பது உண்மை. அவர் பெருத்த பிடிவாதக்காரர். தாம் எடுத்துக்கொண்ட வேலையைப் பற்றி, உலகமே ஏளனம் செய்தாலும், அதை அவர் ஒரு சிறிதும் பொருட்படுத்தமாட்டார். தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்று சொல்லுபவர் ராஜன் என்று எவரும் தவறாக எண்ணவேண்டாம். பிறர் ஏளனத்துக்குள் அகப்பட்டுக்கொண்டு, மனம் கசிந்தும் உடைந்தும் போகாமல் தனது கடமை என்று தோன்றியதை, தளராமல் செய்யும் ஆற்றல் கொண்டவர் ராஜன்.

1905-ம் ஆண்டில் ராஜன் எல்.எம்.பி. வைத்தியப் பரீட்சையில் முதல் வகுப்பில் தேறினார். சர்க்காரின் உபகாரச் சம்பளம் பெற்றுப் படித்தவர். மூன்று வருஷங்களுக்கேனும் சர்க்காரில் ஊழியம் செய்யக் கடமைப்பட்டவர். எனவே, பர்மாவிலே, சர்க்கார் உத்தியோகத்தை ஏற்றுக்கொண்டு, அங்கு சென்றார். உலகத்தை மதிக்காமல் கழுதை சவாரி செய்த ராஜனுக்கு, சர்க்காருக்குக் கீழ்ப்படிந்து, உத்தியோகம் பார்க்கமுடியுமா?

பர்மாவிலே, ஒரு வெள்ளைக்கார டாக்டருக்குக் கீழ், ராஜன் வேலைபார்க்க நேர்ந்தது. பெரிய டாக்டரின் வேலைத் திறமையில், ராஜனுக்கு ரொம்ப அவமதிப்பு, பெரிய டாக்டர் ஆஸ்பத்திரி நோயாளி ஒருவருக்கு இன்புளுவன்ஸா காய்ச்சல் என்று எண்ணி, அதற்கான மருந்தும் ஆகாரமும் கொடுக்க வேண்டும் என்று எழுதிவிட்டுப் போனால், ராஜன் அதை அடித்துவிட்டு, மலேரியா சுரத்துக்கு வைத்தியம் செய்ய வேண்டும் என்று எழுதிவைப்பார். ராஜன் இப்படி வேலை பார்த்தால், பெரிய டாக்டருக்குப் பிடிக்குமா? ராஜன் வேலையை ராஜிநாமா கொடுத்தார், சிறிது காலத்திற்குப் பின்னர், சர்க்கார் உபகாரச் சம்பளப் பணத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டுமே? அதற்குப் பணம் கிடைத்ததுதான் ஆச்சரியம் என்று ராஜன் சொல்லும்பொழுது, தரித்திரத்தின் கொடுமையை எவ்வளவு லேசாகவும் நயமாகவும் சொல்ல முடியும் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

தரித்திரத்துக்கும் சுதந்திர தாகத்துக்கும் எப்பொழுதுமே முரண். எப்பொழுதுமே பகை. தரித்திரனுக்குச் சொந்தக் கருத்தும் சுயேட்சை வாழ்வும் இருக்கமுடியுமா? எனவே தமது வறுமையைக் கொல்ல, ராஜன் வழிதேடத் தலைப்பட்டார். அதற்குச் சீமைப்பட்டமும், வெள்ளைக்கார வைத்திய முறையில் உயர்ந்த பயிற்சியும் வேண்டுமென முடிவுகொண்டு 1908-ம் ஆண்டில் லண்டனுக்குச் சென்றார். அங்கு அவர் பெற்ற பரிசுகளும் நற்சாட்சிப் பத்திரங்களும் பல.

மீண்டும் பர்மாவுக்குத் திரும்பிவந்து, (1910-ம் ஆண்டு) 1914-ம் வருஷம் வரையில் அங்கு இருந்தார். அவரது மனைவி இறந்துபோகவே, அவர் இந்தியாவுக்குத் திரும்பிவந்து, சீரங்கத்தில் வைத்தியத்தொழிலை ஆரம்பித்தார். இந்தியா முழுவதும் பெயர்பெற்ற ஸர்ஜன்களில், ராஜன் ஒருவர். எனவே அவரது தொழில் அபிவிருத்தி யடைந்ததைப்பற்றி தனியாக ஒன்றும் சொல்லத் தேவையில்லை. நாவல் ஆசிரியர்கள் சொல்வது போல, அது நாளொருமேனியும் பொழுது ஒரு வண்ணமுமாக வளர்ந்தது.

சீமையிலிருந்து வந்த வெகு காலம்வரைக்கும் போலீசார் ராஜனிடமிருந்து, தங்கள் கண் பார்வையை மட்டும் எடுத்துக் கொண்டதேயில்லை. அவர் செய்த பாக்கியம்.

எவ்வளவு வருமானம் வந்தாலும், ராஜன் அவர்களால் நாட்டை மறக்க முடியுமா? ஒத்துழையாமைக் காலத்துக்கு முன்னும் அதைத் தொடர்ந்து, அதன் பின்னும், ராஜன் அரசியலில் கலந்து கொண்ட வகை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் நிர்வாகத்தில், ராமசாமி நாயக்கரும் ராஜனும் காரியதரிசிகளாக அமர்ந்திருந்த காலங்களில், அவர்கள் செய்த அபார வேலையை இப்பொழுது எடை போட்டு, நிறுத்துச் சொல்ல முடியாது. அக்காலத்தில், ஊருக்கு ஒரு காங்கிரஸ் சபை ஏற்பட்ட, தீவிரமாக வேலை செய்தது என்று சொன்னால், அது போதாதா? வேறு என்ன சொல்ல வேண்டும்? அக்காலத்தில் தலைவர்களுக்குள் இருந்த மன ஒற்றுமையும் லட்சிய ஒற்றுமையும் நிலைத்து இருக்கலாகாதா?

ஒருவன், தான் செய்துவந்த தொழிலை நிறுத்தினால் போதும், அவன் தொலைந்து போவான், மூன்றுதரம் தமது தொழிலை நிறுத்தி, மூன்றுதரம் அதைத் துவக்கியிருக்கிறார் ராஜன். ஒவ்வொரு தடவையும் இரட்டிப்பு மடங்கு வெற்றியுடன், லாபத்துடன். இதிலிருந்தே, ராஜனுடைய பிடிவாதக் குணமும் சாமர்த்தியமும் ஒருமனப்பட்டு உழைக்கும் தன்மையும் விளங்கும். வக்கீல் தொழிலை நிறுத்திய தேச பக்தர்கள் எத்தனைபேர்கள் திண்டாடுகிறார்கள்!

முதல் ஒத்துழையாமைக் காலத்தில், கோயம்புத்தூர், பாளையங்கோட்டைச் சிறைகளில், அவர் அனுபவித்த கஷ்டத்தைச் சொல்லி முடியாது. (திருநெல்வேலி) பாளையங்கோட்டைச் சிறையில், ‘‘ஹீக்வோம்’’ (வளையப்புழு) என்பதன் சேஷ்டைகளைப் பற்றி ராஜன் ஆராய்ச்சி செய்து பார்க்கையில், புண்கண்டு, புரையோடிப் போயிற்று. அவருடைய இடது கையோடு, உயிரும் போய்விடுமோ என்ற சந்தேகமும் இருந்தது. தப்பிப் பிழைத்தார். இடது கையிலேயே, இரண்டு மூன்று சத்திரம் வைக்க நேர்ந்தது.

ஒரு கை இல்லாத ராஜன் எப்படி ஆபரேஷன் செய்ய முடியும், இனி ஆபரேஷன் செய்ய முடியாதோ என்று நண்பர் ஒருவர் ராஜனை, வருத்தத்துடன் கேட்டார். ‘‘ஓய்ந்து, ஏக்கங் கொண்டால், எல்லாம் ஓய்ச்சல்தான். பிடிவாதத்துடன் பழக்கத்தைக் கைவிடாமலிருந்தால், பிணத்துக்குக் கூட உயிரையும் ஊக்கத்தையும் ஊட்டலாம்’’ என்று ராஜன் பதில் சொன்னார். இந்தப் பதிலைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ராஜன் பிணத்தைப் பற்றிக் குறிப்பிட்டது, அவரது தொழில் வாசனையால். அதைப்பற்றி, நமக்கு என்ன கவலை? மனிதனுடைய பிடிவாதம் ‘அற்ப சொற்ப’ மல்ல. அவ்வளவுதான் நமக்கு வேண்டும்.

உடல் உழைப்பில் ராஜனைத் தோற்கடிக்கக் கூடியவர்கள், நமது தமிழ்நாட்டில் எவரேனும் இருப்பார்களோ என்பது சந்தேகம். வேலையிலே, ‘‘அசுரன்’’. சோம்பர் என்பவர் தேம்பித் திரிவர் என்பதை உணர்ச்சி மூலமாய்க் கண்டறிந்தவர். ஓயாத வேலை, சலிக்காத உழைப்பு, சன்மானத்தையும் புகழையும் வேண்டாத தொண்டு. நல்ல துணிவு. கர்ம வீரனுக்கு வேறு என்ன லட்சணங்கள் தேவை?

பிரசங்க மேடையில் ஏறினால், பைத்தியக்காரனைப் போல முதலிலே தோன்றும். உடலிலிருக்கிற ரத்தம் அவ்வளவும் ஒன்று சேர்ந்து, முகத்தில் வந்து குவிந்துகொண்டது போல காணப்படும். இவர் என்ன பேசப் போகிறார் என்று அலட்சியமாய் மட்டும் நாம் இருக்கலாகாது. பேசத்துவங்கி விட்டால், கிராமியப் பேச்சு, அழகான உபமானங்கள், தைக்கும் சிறுகதைகள், சுடச்சுட விழும் வார்த்தைகள். முத்து முத்தாக கருத்துக்கள். நிறைந்து பரந்து, ஊடுருவி வரும் ஹாஸ்யம். மனதை அள்ளும் கற்பனை இவ்வளவுமா, சதையைத் தாட்சண்யமின்றி அறுத்துத்தள்ளும் ராஜனிடத்தில் என்பீர்களோ? ஆம் என்று அழுத்தமாய் முடிக்கிறேன். 1919-ம் ஆண்டில் சென்னை, திருவல்லிக்கேணி கடற்கரையில் காந்தியின் தலைமையின்கீழ், ராஜன், சத்தியாக்கிரகத்தைப் பற்றிச் செய்த பிரசங்கத்தைப் போல, இனியொரு முறை, நான் எப்பொழுது கேட்கப்போகிறேன்.?

ஹரிஜன இயக்கத்தின் மூலமாய், ராஜன் வைதீகர்களின் கையில் பட்ட பாட்டை எழுத்தில் எழுத முடியாது. வைஷ்ணவர்களின் உண்மையான பரம்பரையில் பற்றுக் கொண்டிருக்கும் ராஜன், வைதீகர்களைப் பொருட்படுத்துவாரா? வந்ததெல்லாம் வரட்டும் என்றுதான் சொல்லுவார்.

ராஜன் ரொம்ப முரடர். ஆனால் அவரை ஆட்டி வைக்க ஒருவருக்குத்தான் சாமர்த்தியம் உண்டு. அந்த ஆசாமியின் பெயர் உங்களுக்குத் தேவையா? அவர்தான் சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார். ஆச்சாரியாரின் சொல்லுக்கு, ராஜன் மாற்றாக எதுவும் சொல்லத் துணிந்ததில்லை.

ராஜன் பணத்தில் ரொம்ப கெட்டிப் பேர்வழி. இதற்குக் காரணங்கள், காலத்தின் போக்கு அவரது இளமையும் வறுமையும் என்று எண்ணுகிறேன். ஆனால் அவர் நண்பர்களுக்கு உள்ளன்புடன் செய்யும் உதவி, கடவுள் ஒருவருக்குத்தான் தெரியலாமோ, என்னவோ, மற்றவர்களுக்குத் தெரியாது. மற்றவர்களுக்குத் தெரியும்படியாக, டம்பமாக உதவி செய்பவர், ராஜன் அல்லர்.

ராஜனுக்கும் ஆச்சாரியாருக்கும் இருந்த அந்யோந்யம் சிறிது காலம் மங்கி நின்றது தமிழர்களுக்குத் தெரியும். இது என்ன விபரீதம் என்று மனம் தவித்தவர்கள் எத்தனை பேர்களோ! ராஜன் தமது இயற்கையான பிடிவாதத்தைக் காண்பித்துக்கொண்டு, காங்கிரஸ் ஸ்தாபனங்களிலிருந்து விலகிக் கொண்டார்.

ராஜனுடைய தேசத்தொண்டு முற்றுப் பெற்றுவிட்டது என்று கொக்கரித்தவர்களும் உண்டு; மனம் ஏங்கினவர்களும் உண்டு. ராஜனை எதிரியாகக் கொண்டிருப்பவர்கள் கொக்கரிப்பதும், அவரை மருக்கலப்பில்லாத தேசபக்தன் என்று மதிப்பவர்கள் மனம் ஏங்குவதும் இயற்கைதானே?

ராஜன் இரண்டையும் கவனிக்கவில்லை. கைக்குக் கிடைத்த வேலைகளைச் செய்து வந்தார். தமது எதிர்காலம் பாழாய்ப் போகாது என்ற உறுதி அவரது உள்ளத்தில் இருந்து வந்தது. ஆச்சாரியார், சென்னை மாகாணத்தின் பிரதம மந்திரியாக ஆனதும், ராஜனை ஒரு மந்திரியாகப் பொறுக்கி எடுத்தது, தமிழ் நாட்டைத் திடுக்கிடச் செய்துவிட்டது.

ஆச்சாரியார் செய்ததுதான் இயற்கையானது என்று தமிழ்நாடு ஏற்றுக்கொண்டது. பின்னர், ராஜன் மந்திரியாக இருந்த காலத்தில், வைத்திய இலாகாவின் உரிமைகளைக் காக்க என்ன பாடுபட்டார் என்பதை இப்போது தெரிந்து கொள்ள முடியாது.

ஆனால் பனகல் ராஜா மந்திரியாக இருந்த காலத்தில், அவர் இந்திய டாக்டர்களின் உரிமைகளுக்காக உழைத்ததை ராஜன் வெகுவாகப் புகழ்வார். இந்தியர்கள் வெள்ளையர்களுக்கு எவ்வகையிலும் சளைத்தவர்கள் அல்லர் என்பதை டுணீசியப் போரில் பெரும்புகழ் படைத்த இந்தியச் சேனையின் தீரத்தைச் சுட்டிக்காட்டிப் பிரச்சாரம் செய்ய வேண்டியதில்லை.

ஆபரேஷனில், டாக்டர் ரங்காச்சாரியும் ராஜனும் ஒன்றாந்தர வெள்ளைக்கார டாக்டர்களுக்கு இளைத்தவர்கள் அல்லர் என்பதை உலகம் ஒப்புக்கொள்ளும்படியாக, இவர்கள் மெய்ப்பித்து விட்டார்கள்.

சுயமரியாதையைக் காத்துக் கொள்ளுவதில் துடியாயிருப்பவர் என்று ராஜன் பல சமயங்களில் காண்பித்துக் கொண்டிருக்கிறார். துடுக்காக நடப்பவன் வெள்ளையனாக இருந்தாலும், அவனுடைய ‘பாச்சா’ ராஜனிடம் பலிப்பதில்லை. கடைசியில், மன்னிப்புக் கேட்டுக் கொள்ள வேண்டியவன் வெள்ளைக்காரனாகத்தான் இருப்பான். இவ்வாறு ஓரிரண்டு சம்பவங்கள் ராஜனுடைய வாழ்க்கையில் நேர்ந்திருக்கின்றன.

சுயமரியாதைக்கும் துணிவுக்கும் தூண்போல நிற்கும் ராஜனை எவரும் எளதிலே அடக்கி விட முடியாது.

Leave A Reply