எதுதான் நிஜ தமிழ் புத்தாண்டு? சர்ச்சைக்கு எப்போது முடிவு? – சகாய டர்சியஸ் பீ

Share

தமிழ் புத்தாண்டு எது என்ற விவாதம் இப்போ எல்லாம் ஒவ்வொரு தை மற்றும் சித்திரை முதல் நாள்களில் தவறாமல் நடைபெற்று வருகிறது. அதை பற்றிய சில வரிகள்,

முதலில் சித்திரை 01 தமிழ் புத்தாண்டா என்பதை பார்ப்போம்…

தமிழ்ப் புத்தாண்டு இன்றுதான் எற்று ஒரு குறிப்பிட்ட நாளை குறித்த எந்த ஒரு குறிப்பும் நமது பண்டைய இலக்கியங்களில் இல்லை பின்னாளில் புகுத்தப்பட்ட ஒரு வழக்கமே அது. அது போலவே சமஸ்கிருத ஹேவிளம்பி வருடம் என்பதும் மதம் மற்றும் சோதிடம் மூலமாக தமிழ்ப் புத்தாண்டு என்று பொய்யாக பரப்பப்பட்டது என்பதும் உண்மை.

பிரபவ, விபவ, சுக்கில என்னும் 60 ஆண்டுகள், தமிழ் ஆண்டுகளே அல்ல. அவை தமிழ்ப்பெயர்களே அல்ல. அத்தனையும் சமஸ்கிருத பெயர்கள், வராஹ மிஹிரர் பயன்படுத்திய சுழற்சி முறை = 60 ஸம்வத்ஸரங்கள், சாலிவாஹன சகம், விக்கிரம சகம் எனும் ஆண்டுமுறை. அந்த ஆண்டுகளுக்கு ஆபாசக்கதைகள் புராணம் என்ற பெயரில் சொல்லப்படுவதும் உண்டு. அபிதான சிந்தாமணி என்ற பின்னாள் கலை களஞ்சியமும் இந்த பொய்கதைகளை உறுதி செய்கிறது.

சகாய டர்சியஸ் பீ

இதனால்தான் அண்மைக் காலத்தில் 60 சமஸ்கிருத பெயர்களையும் வலிந்து தமிழில் பொழிபெயர்த்து பரப்பினர், பிரபவ = நற்தோன்றல், விபவ= உயர் தோன்றல், ஹேவிளம்பி = பொன்தடை என்று மாற்றி விட்டால் சமஸ்கிருதம் தமிழாகி விடுமா?

சரி, பிரபவ. விபவ எனும் 60 சமஸ்கிருத பெயர்கள் வேணாம், மேஷம் தான் முதல் ராசி, சூரியன் மேஷ ராசிக் கட்டத்தில் புகுவது சித்திரை மாதம் அதனால் சித்திரையே புத்தாண்டு என்று சோதிடம் சார்ந்து சில பேர் வாதம் செய்வதும் உண்டு.

முதலில் மேஷம் என்பது முதல் ராசி என்பது தவறான கருத்து, அது நாட்டிற்கு நாடு ஊருக்கு ஊரு வேறுபடும். மேஷம் தான் முதல் ராசி எனில் கிரேக்கம், இலத்தீன், சீன, ஆங்கிலம் என பல பண்பாடுகள் இருக்கின்றதே அங்கெல்லாம் ஏப்ரல் மாதத்தில்தான் புத்தாண்டு வருகிறதா?

சொல்லப்போனால் ஆர்த்தடாக்ஸ் புத்தாண்டு என்று ஒன்று உள்ளது அது பல நூற்றாண்டுகளாக கொண்டாடப்படுவது, ரோம், கிரேக்கம், மாசிடோனியா, ரஷ்யா, ஜார்ஜியா, பல்கேரியா, செர்பியா, உக்ரைன் போன்ற பல பண்பாடுகளில் அது இன்றும் கொண்டாடப்படுகிறது. ஆர்த்தடாக்ஸ் புத்தாண்டு நாள் ஜனவரி -14 (தை 01).

இன்னும் ஒன்று மேஷம் புகும் மாதமே முதல் மாதம்… அதுவே சித்திரை என கூறும் சில பேர் கவனத்திற்கு… இது சோதிடம் அல்ல அறிவியல், பூமியின் சுழற்சியினால் ஒவ்வொரு 73 வருடத்திற்கு 1 டிகிரி மாறும் சூரியனின் பாதை அப்படிப் பார்த்தால் 120BCE யில் மேஷம் புகும் மாதமாக சித்திரை இருந்தது. தற்போது சித்திரை, மீனம் புகும் மாதமாக மாறிவிட்டது மீண்டும் 600 ஆண்டுகள் கழித்து சித்திரை, கும்பம் புகும் மாதமாக மாறும் அப்போது எதை முதல் மாதம் என்று சொல்வீர்கள்?

ஒவ்வொரு 2,665 ஆண்டுகளுக்கும் சித்திரையானது, மேஷம், மீனம், கும்பம், மகரம் புகும் மாதமாக மாறிக்கிட்டே இருக்கப்போகுது.

அதனால் ஒரு இனத்தின் புத்தாண்டு என்பது மதம் சார்ந்தோ அல்லது சோதிடம் சார்ந்தோ இருக்க முடியாது. எனவே, சித்திரை 01 தமிழ்ப் புத்தாண்டு இல்லை என்பது தெளிவு.

அடுத்து தை 01 தமிழ்ப் புத்தாண்டா என்பதை பார்க்கலாம்,

தமிழ் அறிஞர்கள், தமிழின் அடையாளமாக தமிழ் ஆண்டு தமிழை அடிப்படையாக கொண்டு இருக்க வேண்டும் மதத்தை அல்ல என்று முடிவு செய்து, 1935, மே 18 மற்றும் 19 தேதிகளில் சென்னை பச்சையப்பன் கல்லூரியிலும், பின்னர், டிசம்பர் 26, 1937ல் திருச்சியிலும் கூடி வள்ளுவர் காலம் பற்றி ஆராய்ந்தார்கள், அதில் கலந்து கொண்ட சில தமிழ் அறிஞர்கள் பெயர்கள் உங்களின் பார்வைக்கு…

மறைமலை அடிகளார், உ.வே. சாமிநாத ஐயர், திரு.வி.க., நாவலர் ந.மு.வேங்கடசாமி (நாட்டார்), முத்தமிழ்க் காவலர் கி,ஆ.பெ.விசுவநாதம் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், பாவேந்தர் பாரதிதாசன், பெரியார் ஈ.வெ.ரா., கரந்தை தமிழ்ச் சங்கத் தலைவர், உமா மகேசுவரானார், நாவலர். சோமசுந்தர பாரதியார் மற்றும் பலர்.

அவர்களின் ஆய்வின் இறுதி அறிக்கையில்,

1. திருவள்ளுவர் பெயரில், நாம் ஒரு தொடர் ஆண்டினை பின்பற்றுவது நலம். அதையே இனி தமிழ் ஆண்டு எனக் கொள்ளவேண்டும்.

2. திருவள்ளுவர் காலம் தோராயமாக 31BCE எனவே ஆங்கில ஆண்டுடன் 31-ஐக் கூட்டினால் திருவள்ளுவர் ஆண்டு கிடைக்கும்.
நன்றாக கவனிக்க… இங்கு வள்ளுவர் ஆண்டு முறைதான் பேச்சே தவிர சித்திரையா, தையா என்பது இல்லை,

(இதற்கான தரவு, பச்சையப்பன் கல்லூரி அறிக்கை 1935, செந்தமிழ்ச் செல்வி இதழ்).

ஆனால் மறைமலை அடிகளின் மாணவரான நாவலர் சோமசுந்தர பாரதியார், இந்த வள்ளுவர் ஆண்டோடு தை 02-ம் நாளை வள்ளுவர் திருநாள் எனவும் வகுத்து அருளினார், அதற்கு தமிழ் அறிஞர்கள் ஒப்புதல் அளிக்க… அதுவே 1971-ம் ஆண்டில் அரசு விழாவும் ஆனது. (இதற்கான தரவு கோவை 1953, கி.ஆ.ப. உரை. நாவலர் பாரதி தை 02 முயற்சிகள்.)

திருக்குறளுக்கு இன்றும் பலர் பின்பற்றும் உரை எழுதிய தமிழ் அறிஞர் டாக்டர். மு.வ. என்ன சொல்கிறார் என்றால், இன்று பொங்கல் விழாவினை கொண்டாடுகிறார்களே என்ன காரணம் தெரியுமா? சூரியனே பயிர்களுக்கு உயிர்கொடுத்து வளர்ப்பவன். கிராம மக்கள் நன்றாக வாழ்ந்தால்தான் நகர்ப்புற மக்களும் நன்றாக வாழ முடியும். ஆகையால் அவர்களும் கொண்டாடுகின்றார்கள். இன்னொரு காரணமும் உண்டு முற்காலத்தில் வருடப்பிறப்பு சித்திரை முதல் நாளாக இருந்தது இல்லை, தை முதல் நாளைத்தான் பெரியவர்கள் வருடப் பிறப்பாக கொண்டாடினார்கள்.

அந்த நாள் புதிய வாழ்வாக இருக்க வேண்டும் என்று ஏற்படுத்தினார்கள், உண்ணுவதில் புதுமை, உடுப்பதில் புதுமை, வீட்டில் புதுமை, தெருவில் புதுமை ஊரெல்லாம் புதுமை, மனதிலும் புதுமை, புதிய பச்சரிசியை பொங்குகிறார்கள், புதிய காய்கறிகளை சமைக்கிறார்கள், புதிய ஆடைகளை வாங்கி உடுத்துகிறார்கள், வீட்டிற்கு வெள்ளை அடித்து அழகு செய்கிறார்கள், இப்படி புது ஆண்டு பிறப்பாக பொங்கல் கொண்டாடுகிறார்கள்.

(இதற்கான தரவு, 1988, கோலாலம்பூர், பொங்கல் மலரில் மு.வ கட்டுரை மீள் பதிப்பு )

எனவே தை 01 வள்ளுவர் ஆண்டே தமிழ் புத்தாண்டு.

இது ஏதோ குறிப்பிட்ட முதலமைச்சர் உருவாக்கியது அல்ல மாறாக தமிழ் அறிஞர்களால் உருவாக்கப்பட்டது.

ஒருவேளை அறிஞர் அண்ணா முதலமைச்சராக இருந்தபோது மதராஸ் என்பதை தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்தது போன்று இந்தத் தமிழ்ப்புத்தாண்டு மாற்றமும் சட்டம் வழியாக கொண்டு வந்திருந்தால் இன்று இந்த விவாதங்கள் இல்லாமல் இருந்து இருக்கும்.

அனைவருக்கும் இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்!

Leave A Reply