இந்நேரத்தில் அவர்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை கொடுப்பதுதான் பெற்றோர்களாக குழந்தைகளை பாதுகாக்க ஒரே வழி.
கொரோனா பாதிப்பு எங்கு குழந்தைகளையும் தாக்கிவிடுமோ என்ற அச்சம் பல பெற்றோர்களுக்கு உண்டு. குறிப்பாக மூன்றாவது அலை குழந்தைகளை தாக்கலாம் என்ற செய்தி மேலும் பீதியடையச் செய்துள்ளது.
இந்நேரத்தில் அவர்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை கொடுப்பதுதான் பெற்றோர்களாக குழந்தைகளை பாதுகாக்க ஒரே வழி.
அந்த வகையில் ஒரு வயது நிரம்பிய உங்கள் குழந்தைக்கு எந்த மாதிரியான உணவு வழங்கலாம் என்று பார்க்கலாம்.
மருத்துவர்கள் 1-3 வயது நிறைந்த குழந்தைக்கு தினசரி 1300 கலோரிகளும் 16 கிராம் புரதமும் கொடுக்க வேண்டும் என்கின்றனர். எனவே புரதம் நிறைந்த உணவுகளில் குழந்தைக்கு எதையெல்லாம் தரலாம் என்று பார்க்கலாம்.

பால் : ஒரு கப் பாலில் 8 கிராம் புரதம் உள்ளது. பாக்கெட் பால் சுத்திகரிக்கப்படுவதால் கொழுப்பு, புரத அளவு மாறுபடலாம். எனவே பசும்பால் எருமைப் பால் இருந்தால் காய்ச்சி கொடுங்கள். அதேபோல் அதில் மற்ற பவுடர்கள் எதுவும் கலக்காமல் பால் மட்டும் கொடுத்தாலே நிறைவான புரதச்சத்தைப் பெறலாம்.

பழங்கள் : கிவி பழம், அத்திப்பழம், நாவல் பழம், பலாப்பழம், கொய்யா பழம் கொடுக்கலாம். பலாப்பழம் கொடுக்கும்போது அளவாகக் கொடுக்க வேண்டும். விரைவில் செரிமானம் ஆகாது. நன்கு பழுத்ததாக கொடுங்கள். மற்ற பழங்களையும் மசித்து ஊட்டலாம் அல்லது ஜூஸாக அரைத்து கொடுக்கலாம்.

பருப்பு வகைகள் : துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு தினசரி உணவில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். இட்லி , தோசைக்கு சாம்பாரில் பருப்பு கூடுதலாக சேர்த்து ஊட்டுங்கள்.
அதேபோல் பாதாம், முந்திரி, வேர்க்கடலையும் கொடுக்கலாம். வேர்க்கடலையை அதிகம் தர வேண்டாம். செரிமானம் பாதிக்கும். இவற்றில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பருப்பு வகையாகக் கொடுங்கள்.

கீரை வகைகள் : பசலைக் கீரையில் புரதச் சத்து அதிகம் உள்ளது. எனவே இதை நன்கு வேக வைத்து குழைத்து சாதத்துடன் கலந்து ஊட்டுங்கள். அரை வேக்காட்டில் கொடுக்க வேண்டாம்.

காளிஃப்ளவர் : 100 கிராம் காளிஃப்ளவரில் 2 கிராம் புரதம் உள்ளது. எனவே இதையும் வேக வைத்து ஊட்டுங்கள்.
முட்டை : முட்டையை நன்கு வேக வைத்து மசித்துக் கொடுக்க வேண்டும். மதிய உணவுக்கு முன் 10-11 மணி அளவில் வேக வைத்து தனியாக ஊட்டலாம்.
மீன் : நன்கு வேக வைத்த மீனை முள் இல்லாமல் பார்த்து கவனமுடன் கொடுங்கள். அதேபோல் காரம் அல்லாமல் கொஞ்சமாக எண்ணெய் ஊற்றி செய்து கொடுங்கள். இல்லையெனில் வயிற்றில் உபாதையை ஏற்படுத்தக் கூடும்.
கோழி : கோழியை நன்கு வேக வைத்து கைகளில் மசித்துக் கொடுங்கள். குழந்தை அப்படியே விழுங்குகிறதா என்பதையும் கவனியுங்கள். ஏனெனில் விரைவில் ஜீரணிக்காது. உபாதையாகலாம்.
பிராய்லர் கோழியைவிட நாட்டுக்கோழி வாங்கி ஊட்டுவது நல்லது. கறியாக கொடுத்தால் சாப்பிடவில்லை எனில் வேக வைத்த தண்ணீரைக் கூட கொடுக்கலாம்.
தயிர் /நெய் : இவை இரண்டிலும் போதுமான அளவு புரதச்சத்து உள்ளது. எனவே தயிர் சாதம் ஊட்டலாம். புளிக்காத தயிராக ஃபிரெஷாக இருக்க வேண்டும். நெய் சாதத்துடன் தினமும் சிறிதளவு பிசைந்து ஊட்டலாம்.

கோதுமை பிரெட் : கோதுமை பிரெட்டை சுட்டு பிச்சி போட்டுக் கொடுத்தால் குழந்தைகள் அழகாக சாப்பிடுவிடுவார்கள். இரண்டு துண்டு பிரட்டில் 7 கிராம் புரதம் உள்ளது. இதோடு சீஸ் கலந்தும் கொடுக்கலாம். சீஸிலும் போதுமான புரதச்சத்து உள்ளதால் கூடுதல் புரதச்சத்தை அளிக்கலாம்.
மேலே குறிப்பிட்டுள்ள உணவுகள் உங்கள் குழந்தைக்கு ஒத்துக்கொள்கிறதா அல்லது ஒவ்வாமையை ஏற்படுத்துகிறதா என பார்த்துவிட்டுக் கொடுங்கள்.