மதுக்கடை வரிசையில் பெண்களை பார்த்த நடிகை டுவீட்

Share

கொரோனா பரவலைத் தடுக்க மே 17-ம் தேதி வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மதுபானக் கடையில் பெண்கள் வரிசையில் நிற்பதைப் பார்த்த நடிகை இங்கேயாவது 33 சதவீத இட ஒதுக்கீடு இருக்கே என்று டுவிட் செய்துள்ளார்.

கொரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் பொது முடக்கம் நடைமுறையில் உள்ளது. மத்திய அரசு மே 17-ம் தேதி வரை சில தளர்வுகளுடன் பொது முடக்கத்தை நீட்டித்துள்ளது. இதில் பச்சை மண்டலங்களில் கடைகளை திறக்க தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதையடுத்து, டெல்லி, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட இந்தியாவின் பல மாநிலங்களில் மது பானக் கடைகள் திறக்கப்பட்டன. 40 நாட்களுக்கு மேல் குடிக்காமல் இருந்த மது பிரியர்கள், மதுபானக் கடையின் முன்பு சமூக இடைவெளியுடன் மது வாங்குவதற்கு நீண்ட வரிசையில் நின்றனர். இந்த வரிசை சுமார் ஒரு கிலோ மீட்டருக்கும் மேல் நீண்டு இருந்ததுதான் பலருக்கும் வியப்பையும் அதிர்ச்சியையும் ஒரு சேர ஏற்படுத்தியது.

பெங்களூருவில் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டவுடன் மதுபானம் வாங்குவதற்கு இளைஞர்கள், முதியவர்கள், இவர்களுடன் பெண்களும் மது வாங்குவதற்கு மதுக்கடைகள் முன்பு குவிந்தனர். ஆனால், முன்பு போல, அல்லாமல், கொரோனா அச்சுறுத்தலால், சமூக இடைவெளியுடன் நீண்ட வரிசையில் மது வாங்குவதற்கக நின்றனர். இதில் பெண்கள் துப்பட்டாவை முகக்கவசமாக அணிந்துகொண்டு மது வாங்குவதற்கு வரிசையில் நின்றனர். அவ்வப்போது சில பெண்கள் மதுக்கடைகளுக்கு சென்று மது வாங்கிச் செல்வதையே அதிர்ச்சியுடன் பார்த்தவர்கள் பெண்கள் வரிசையில் நின்று மது வாங்குவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

மதுக்கடையில் பெண்கள் வரிசையில் நிற்கும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது.

இந்த புகைப்படங்களைப் பார்த்த தமிழில் வழக்கு எண் 18/9 மற்றும் ஆதலால் காதல் செய்வீர் படங்களில் நடித்த நடிகை மனிஷா யாதவ் ஒரு டுவிட் செய்து கவனத்தை ஈர்த்துள்ளார்.

நடிகை மனிஷா யாதவ், தமிழ் சினிமாவில் மிக முக்கியமான படமான வழக்கு எண் 18/9 என்ற படத்தில் நடித்தவர். இவர் பெங்களூருவில் பெண்கள் மது வாங்குவதற்கு மதுக்கடையில் வரிசையில் நின்ற புகைப்படத்தை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “இதற்கு முன்பு பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு முறையாக பின்பற்றப்பட்டிருக்கிறதா என்பது எனக்குத் தெரியாது. ஆனால், இங்கேயாவது அதை கடைபிடிக்கப்படுவது தெர்கிறது. மதுக்கடைகளுக்கு வெளியே ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனி வரிசை நீண்டு இருப்பது பார்க்க முடிகிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

மனிஷா யாதவின் கிண்டலான விமர்சன டுவிட் சினிமா வட்டாரங்களிலும் ரசிகர்கள் மத்தியிலும் கவனத்தை பெற்றுள்ளது.

Leave A Reply