இந்தியாவில் தனியார் மயம் சாத்தியமா?

Share

அமெரிக்க ஐரோப்பிய நாடுகளோடு ஒப்பிட்டு தனியார்மயம் நல்லதுதானே என்கிறார்கள்.. அங்கு நிலவும் தனியார் மயத்துக்கும் இந்தியா போன்ற நாட்டில் நிலவும் தனியார் மயத்துக்கும் பெரிய வித்தியாசம் உண்டு..

அங்கெல்லாம் தொழில்நுட்ப கண்டுபிடிப்பாளர்கள், புதிய முயற்சி முன்னெடுப்பாளர்கள் (entrepreneurs) இப்படிப்பட்டவர்கள்தான் தொழில்களையும் கம்பெனிகளையும் துவக்கி பெரிய அளவுக்கு வளர்ப்பார்கள்.

ஆனால் இந்தியாவிலோ நிலைமை தலைகீழ்.. ஏறக்குறைய 90% பெரும் பணக்காரர்கள் தொழிலதிபர்கள் ல்லாம் பரம்பரை பணக்காரர்கள் அல்லது அரசியல் செல்வாக்கோடு வளர்ந்தவர்கள்.. எதையும் புதிதாக கண்டு பிடித்து அதை தொழிலாக செய்வதில்லை, இருக்கும் பணம் அல்லது செல்வாக்கினால் வெளிநாட்டினரிடம்  லைசென்ஸ் பெற்று அவர்களுடைய தயாரிப்பை இங்கே உற்பத்தி செய்வதுதான் நடக்கிறது.

மற்றுமொரு மிகப்பெரிய வித்தியாசம் இந்தியாவில் தனியார் துறையானது அந்தந்த சாதி மற்றும் குடும்ப குழுக்களுக்குதான் முதலிடமும் முக்கியத்துவமும் கொடுப்பவை. மேற்கத்திய நாடுகளில் நிலவும் கார்பரேட் கலாச்சாரம், மற்றும் கார்ப்பரேட் கவர்னன்ஸ் இங்கு கிடையாது.

உதாரணத்துக்கு டிவிஎஸ் குழுமம் என்று எடுத்துக்கொண்டால் அங்கு வேலை மற்றும் அதிகாரங்களில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவார்களாகத்தான் இருப்பார்கள். வேலை வாய்ப்புகளில் அவர்களுக்குத்தான் முன்னுரிமை கொடுப்பார்கள்.

தமிழ்நாடு மெர்கண்டைல் பேங்க்கை எடுத்துக் கொண்டால், இதில் வேலை செய்பவர்கள் 90 சதவீதம் ஒரே ஜாதியைச் சேர்ந்தவர்கள். இந்தியாவில் உள்ளூர் கடைகள் முதல் மிகப் பெரிய நிறுவனங்கள் வரை இதுதான் நிலை..

அதனால்தான் இந்தியாவில் பொதுத்துறையோடு தனியார் துறையும் சேர்ந்து இயங்கும் மிக்ஸட் எக்கானமி நடைமுறைப்படுத்தப்பட்டது. பணபலம் இல்லாத சமூகங்களுக்கும் வேலைவாய்ப்பில் இடம் கிடைக்கும் வகையில் இட ஒதுக்கீடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டன.

அமெரிக்கா போன்ற நாடுகளிலும் அஃபெர்மெடிவ் ஆக்‌ஷன் affirmative action, மற்றும் equal ஆப்பர்சூனிட்டி போன்ற முறைகள், ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் மற்றும் ஸ்பானியர்கள் போன்ற மைனாரிட்டி சமூகத்திற்கு உதவும் வகையில் தனியார் கார்ப்பரேட் கம்பெனிகளில் முன்னெடுக்கப்படுகின்றன. மைனாரிட்டி பிசினஸ் என்னும் வகையில் இந்த பிரிவினர்கள் நடத்தும் தொழில்களுக்கு வியாபாரத்திற்கு தனியாக அரசு உதவும் திட்டமும் அங்கு உண்டு..

இந்தியாவில் கடந்த 70 ஆண்டுகளாக பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கவும் வளர்க்கவும் கோடிக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்விடங்களையும் விவசாய நிலங்களையும் நாட்டிற்காக கொடுத்துள்ளார்கள்.

உதாரணமாக நெய்வேலி நிலக்கரி சுரங்கமாக இருக்கட்டும் அல்லது பெரிய விமான நிலையமாக இருக்கட்டும், அல்லது மிகப்பெரிய துறைமுகமாக இருக்கட்டும், அதை அமைப்பதற்கு லட்சக்கணக்கான கிராமத்தினர் பல நூறு ஆண்டுகளாக வாழ்ந்து வந்த இடங்களை விட்டு வெளியேறி, மிகக் குறைவான இழப்பீடுகளை பெற்று, நாட்டின் வளர்ச்சிக்காக தியாகம் செய்திருக்கிறார்கள்.. அவற்றையெல்லாம் அப்படியே தூக்கி தனியாரிடம் கொடுப்பது எவ்வளவு பெரிய துரோகம், நம்பிக்கை மோசடி.

இதற்கெல்லாம் ஒரு விலையில்லாமல் போகாது. மக்கள் சரியான பதிலடி கொடுத்தே தீருவார்கள்.

Prakash J.P.

Leave A Reply