சொன்ன சொல்லை காப்பாற்றுவார் முதல்வர் என நம்புகிறோம் – ஜாக்டோ ஜியோ விரிவான அறிக்கை

Share

தேர்தலுக்கு முன் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு அளித்த வாக்குறுதியை நிச்சயமாக முதலமைச்சர் நிறைவேற்றுவார் என்று நம்புவதாகவும், சங்கத்துடன் பேச்சு நடத்த நேரம் ஒதுக்கும்படியும் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

ஜாக்டோ ஜியோ மாநில மாநில ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ஆ.செல்வம், சி. சேகர், ஜெ.காந்திராஜன் தலைமையில் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் புதனன்று நடைபெற்றது.

கூட்டத்தின் முடிவில் வெளியிடப்பட்ட அறிக்கை விவரம் வருமாறு…

தமிழக முதல்வராக திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் பதவியேற்று ஓராண்டு காலம் நிறைவடைந்திருக்கிறது. அரசு விளம்பரங்களில் எல்லாம் திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் 75 சதவீதத்தை நிறைவேற்றி விட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் முதல்வராகப் பதவியேற்ற போது கொரோனா இரண்டாவது அலை தலை தூக்கியிருந்ததாலும் அதன்பிறகு மழை வெள்ள பாதிப்புகளால் தமிழகம் ஆட்பட்டிருந்ததாலும் ஆசிரியர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும், பணியாளர்களுக்கும் மாண்புமிகு முதல்வர் கொடுத்திருந்த தேர்தல் வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றிட அழுத்தம் தராமல் பொறுமையாகக் காத்திருந்தோம். மேலும் முதல்வர் அவர்களும் தான் கொடுத்தத் தேர்தல் வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவேன் என்று அவ்வப்போது தெளிவுபடுத்தி வந்ததாலும் மற்றவர்களைப் போல் நாமும் நெருக்கடி தர வேண்டாம் என்று பொறுமையுடன் இருந்து வருகிறோம்…

ஆனால் மாண்புமிகு முதல்வரின் கூற்றுக்கு நேரெதிராக கடந்த ஓராண்டு காலமாகவே ஆசிரியர்கள் அரசு ஊழியர் பணியாளர்களின் கோரிக்கைகள் உரிமைகளுக்கு எதிராக மாண்புமிகு நிதியமைச்சர் அவர்கள் பேசி வருவதும், உண்மைக்கு மாறான தகவல்களை மாண்பமை பொருந்திய சட்டமன்றத்திலேயே மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர், மாண்புமிகு முதல்வர் ஆகியோரின் முன்னிலையிலேயே எடுத்துரைப்பதும் ஆசிரியர்கள் , அரசு ஊழியர்களுக்கு தரப்படும் ஊதியம், பென்ஷன் மற்றும் படிகளை அரசின் பெருஞ்சுமைகளாக பொதுவெளியில் பிம்பப்படுத்துவதும் அரசின் வருவாயில் அறுபது சதவீததிற்கு மேல் ஆசிரியர்கள் அரசு செலவிடுவதாகவும் அதனால்தான் மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்த த்த முடியவில்லை போன்றதான பாவனைகளுடன் ஆசிரியர்கள் அரசு ஊழியர்களை, பணியாளர்களை பொதுமக்களுக்கு எதிரானவர் களாக சித்தரித்து, இந்தா இதுதான் யாசகம் இதுக்கு மேலே கேட்கக் கூடாது.” என்கிற ரீதியில் அசிங்கப்படுத்தி அவமானப்படுத்தி பேசியுள்ளதும் ஒவ்வொரு ஆசிரியர், அரசு ஊழியரின், பணியாளரின் நெஞ்சில் குத்திய நெருஞ்சி முள்ளாக உள்ளது. | சேமநல அரசு, சமூக நீதி அரசாங்கம் போன்ற வார்த்தைகளுக்கு முழுமையான அர்த்தம் என்னவென்று மாண்புமிகு நிதியமைச்சர் அவர்களுக்கு தெரியுமா என்ற கேள்வியும், ஓய்வூதியம் என்பது அரசின் கருணை அல்ல கடமை என்ற புரிதலும் அவருக்கு உண்டா என்ற சந்தேகமும் தான் எழுகிறது

இத்தனை அவமானங்களுக்குப் பிறகும் ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் பொறுமையோடு இருப்பதற்கு காரணம் நிதியமைச்சரின் கூற்றுக்களை மாண்புமிகு முதல்வர் மறுதலித்து ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் சமுகத்திற்கு கொடுத்த உறுதிமொழியை நிச்சயம் நிறைவேற்று வார் என்ற நீடித்த நம்பிக்கையில்தான்.

மாண்புமிகு நிதியமைச்சரைப்போல் கார்ப்பரேட் சேவகம் செய்யும் அறிவுஜீவிகள் ஓய்வூதியம் என்பது அரசாங்கம் அதன் ஊழியர்களுக்கு காட்டும் கருணை என்று லாப நட்டக்கணக்காக அதை பார்க்கிறார்கள். இந்த ஓய்வூதியம் என்பது ஊழியர்கள் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்த தொகைதான் என்பதை அவர்கள் உணர வேண்டும்.

ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியிடமிருந்து இந்தியாவின் ஆட்சி அதிகாரத்தை பிரிட்டிஷ் மகாராணி ஏற்றுக்கொண்ட பின்னர் ஓய்வூதியத் திற்கான திருத்த மசோதா 1867ல் கொண்டுவரப்பட்டது. அதற்கு முன்னர் இந்த ஓய்வூதியம் இந்தியாவில் வருவாய், காவல்துறை மற்றும் பொதுப்பணித் துறையினருக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. 1891ல் டென்மார்க்கும், 1898ல் நியூசிலாந்தும் வயதானவர்களுக்ககான ஓய்வூதியத்தை அறிமுகப்படுத்தி இருந்தாலும் ஓய்வூதியம் என்ற கோட்பாடு சட்டபூர்வமாக உலகில் அறிமுகப் படுத்தப்பட்டது என்பது 1917ல் சோவியத் யூனியனில்தான். அந்நாட்டில் தோழர் லெனின் தலைமையிலான சோவியத் அரசாங்கம் பணிஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம், பணிக்கொடை, சலவைப்படி, . முடிவெட்டும் படி, குடும்ப நலன் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு உரிமைகளை சட்டமாக நிறைவேற்றியது. இந்தியாவில் முதலாவது மத்தியக் குழுவின் பரிந்துரை களின் விளைவாக, விரிவாக்கப்பட்ட ஓய்வூதிய விதிகள் அடங்கிய அறிவிப்பு 1950 ஏப்ரல் 17 அன்று வெளியிடப்பட்டது, அதுவரைபங்களிப்பு சேமநலத் திட்டமாக இருந்தது ஓயவூதிய திட்டமாக மாற்றப்பட்டது. பங்களிப்பு சேமநல திட்டத்தில் அரசு உழியர் செலுத்த வேண்டிய பங்களிப்பு பொது சேமநல திட்டமாக மாற்றியமைக்கப்பட்டு அதில் ஊழியர்கள் பங்களிப்பு செய்ய வழிவகை காணப்பட்டது, அதேசமயம் சேமநல நிதிக்கு ஊழியர் செலுத்தும் பங்களிப்புத் தொகைக்கு சமமான தொகையை செலுத்துவதிலிருந்து அரசு தன்னை விடுவித்துக் கொண்டது. இதன்முலம் அரசு அனைத்து ஊழியர் களுக்கும் சேமநல நிதிக்கான பங்களிப்பு செலுத்துவதற்குப் பதிலாக ஓய்வு பெறுபவர்களுக்கு மட்டும் ஓய்வூதியம் வழங்கியதன் முலம் கணிசமான தொகையை அரசு திட்டங்களுக்குப் பயன்படுத்த அரசால் முடிந்தது,

70 பல ஆக, ஊழியர்களின் சேமநல நிதிக்கு அரசு செலுத்த வேண்டிய பங்களிப்பை நிறுத்திக் கொண்டதால் கடந்த ஆண்டுகளில் சுமார் இரண்டு லட்சம் ஊழியர்களுக்கு சேரவேண்டிய லட்சம்கோடி ருபாய்களை அரசு எடுத்துக்கொண்டுதான் ஓயவூதியம் கொடுத்து வருகிறது என்பதை மத்திய மாநில அரசுகளும் மாண்புமிகு நிதியமைச்சரைப் போன்ற பொருளாதார வல்லுநர்கள் மறைக்க முற்படலாம். சட்டசபையில் தவறான புள்ளி விவரங்களைச் சொல்லி பழைய ஓய்வூதியத் திட்டத்தை குழிதோண்டி முடக்கப்பார்க்கலாம். ஆனால் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் இத்தகைய செயல்களை ஒன்றுகூடி எதிர்த்து நிறபார்கள் என்பதை மீண்டும் மீண்டும் மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு மிகப்பணிந்து தெரிவிக்க கடமைப்பட்டிருக் கிறோம்,

ஓய்வூதியக் கோட்பாடு என்பது இருக்கக்கூடிய ஆதாரங்களைக்கொண்டு, ஓய்வு பெற்றவர்கள் வேறு எதிர்பார்ப்பு எதிர்பார்ப்பு இன்றி கவுரமான, சுதந்திரமான, சுயமரியாதையுடன்கூடிய வாழ்க்கையை நடத்த உதவக்கூடியதாகவும் பணி ஓய்வுக்கு முன்னர் இருந்த வாழ்க்கைத் தரத்திறகு சமமான வாழ்க்கைத் தரத்தை உத்தரவாதம் செய்யக்கூடியதாகவும் அமைய வேண்டும். ஓய்வூதியம் என்பது கருணைத்தொகையல்ல. அது சமுகரீதியான சட்டப்படியான உறுதிப்பாடாகும். இது வேலை அளித்தவருடைய விருப்பத்தைப் பொறுத்தோ காருண்யத்தை பொறுத்தோ வழங்கப்படக் கூடியதல்ல. மாறாக கடந்த காலத்தில் ஆற்றிய பணிக்கான ஊதியமாகவும் ஒரு சமுகநலத் திட்டமாகவும் பொருளாதார நீதியை உழைப்பாளிக்கு அவருடைய வயது முதிர்ந்த காலத்தில் வழங்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வரையறுத்துள்ளது (AIR 1983 sc 130).

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தமது பணிக்காலத்தில் சந்தித்து வரும், குறைவான ஊதியம். பணிப்பளு, படிகள் வெட்டு, போனஸ், ஈட்டிய விடுப்பை பணமாக்கிக்கொள்ளும் உரிமை மறுப்பு, போன்ற பல்வேறு சங்கடங்களை சகித்துக்கொண்டு பணியாற்று வதற்குக் காரணமே, பணியிலிருந்து ஓய்வு பெற்றபின் அந்திமகாலம் வரை வாழ்க்கையை நடத்துவதற்கு உத்தரவாதமான ஓய்வூதியம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான், அதை மாண்புமிகு முதல்வர் அவர்கள் எதிர்கட்சியாக இருந்த நேரத்திலும் தேர்தல் காலத்திலும் உறுதி அளித்தபடி நிறைவேற்றித் தருவார், தரவேண்டும் என்ற தளராத நம்பிக்கையோடு ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும், பணியாளர்களும் இருக்கிறார்கள். மாண்புமிகு முதல்வர் அவர்கள் மௌனம் கலைத்து, மகிழ்வு தரும் அறிவிப்பை வெளியிடுவார் என்று 19 ஆண்டு காலம் காத்திருக் கிறோம், சொன்ன சொல் காப்பவர் முதல்வர் என்ற வார்த்தை என்றும் நிலைக்கட்டும் அது இப்போது ஆசிரியர், அரசு ஊழியர், பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதியத்தை நிலைநிறுத்தியதாக இருக்கட்டும்

ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பணியாளர்களின் கோரிக்கைகள் குறித்து ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்களுடன் விவாதிப்பதற்கு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் உரிய நேரத்தை ஒதுக்கித் தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளனர்.

Leave A Reply