வெளிநாடு வாழ் தமிழர்களை மீட்க 11 விமானங்கள் தயார்

Share

கொரோனா பாதிப்பு, முடக்கம் காரணமாக வெளிநாடுகளில் முடங்கியுள்ள 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்களை பத்திரமாக இந்தியாவுக்கு அழைத்து வர மத்திய அரசு மே 7ம் தேதி முதல் 13ம் தேதி வரை, 64 விமானங்கள், 3 கப்பற்படை கப்பல்கள் உள்ளிட்டவைகளை அனுப்ப உள்ளது.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், விமானத்துறையுடன் இணைந்து இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. முதல்கட்டமாக அபுதாபியில் தவித்து வரும் கேரளாவை சேர்ந்த 209 பேர் கொச்சி அழைத்து வரப்பட உள்ளனர். அடுத்த விமானம் மூலம் 200 பேர் கோழிக்கோடு அழைத்து வரப்பட உள்ளனர்.

மாலத்தீவு மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள் கப்பல்கள் மூலம் மீட்கப்பட உள்ளனர்.
இந்த முதற்கட்டமான இந்தியர்கள் அழைத்துவரும் நிகழ்ச்சியில், கேரளாவை சேர்ந்த 2,250 பேர் தாயகம் திரும்புவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. பின்னர் அவர் பேசியதாவது, இந்தியாவிற்கு புறப்பபடுவதற்கு முன்னரே, அந்தந்த நாடுகளில் உள்ள இந்தியர்களுக்கு கொரோனா பரிசோதனை நிகழத்தப்பட வேண்டும் என்று அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை, பிரதமர் மோடியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இத்தாலி உள்ளிட்ட நாடுகளிலிருந்து விமானம் புறப்படுவதற்கு முன் இந்தியர்கள் அனைவரும் சோதனை செய்யப்பட வேண்டும். மருத்துவ குழுக்கள் அதிகம் தேவைப்படின், கேரளா அனுப்ப தயாராக உள்ளதாக அந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. விமானத்தில் ஒருவருக்கு தொற்று இருந்தால் கூட, அனைவருக்கும் பாதிப்பு ஏற்பட்டு விடும். அவர்கள் அத்தொற்றுடன் கேரளா வரும்பட்சத்தில் பாதிக்கப்படும் கேரளா மட்டுமல்லாது ஒட்டுமொத்த நாடும் என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது. கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து நாங்கள் சிறந்த புரோட்டாகாலை வடிவமைத்துள்ளோம். மத்திய அரசுக்கும் தங்களது புரோட்டாகாலை வழங்க தயாராக இருப்பதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

மே 7 முதல் 13ம் தேதி வரையிலான காலகட்டத்தில், ஐக்கிய அரபு நாடுகளுக்கு 10 விமானங்களும், அமெரிக்கா, இங்கிலாந்து, வங்கதேசம், மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு தலா 7 விமானங்களும், சவுதி அரேபியா, சிங்கப்பூர், குவடத், பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு தலா 5 விமானங்களும், கத்தார், ஓமன், பஹ்ரைன் நாடுகளுக்கு 2 விமானங்களும் அனுப்பப்பட உள்ளன.

இந்த 64 விமானங்களில் 15 விமானங்கள் கேரளாவுக்கும், டெல்லி, தமிழ்நாட்டுக்கு தலா 11 விமானங்களும், மகாராஷ்டிரா, தெலுங்கானாவுக்கு தலா 7 விமானங்களும், மற்ற விமானங்கள் குஜராத், பஞ்சாப், ஜம்மு காஷ்மீர், கர்நாடகா, உத்தரபிரேதச மாநிலத்திற்கு வர உள்ளன. இந்தியா அழைத்துவரப்பட இந்தியர்களை, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் பட்டியலிட்டுள்ளது. அதன்படி, வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்கள், குறைந்த கால விசா கொண்டவர்கள், விசா காலாவதியானவர்கள், மருத்துவ உதவிகள் தேவைப்படுபவர்கள், கர்ப்பிணிகள், வயதானவர்கள், குடும்ப உறுப்பினர் இறப்பின் காரணமாக இந்தியா வர விரும்புபவர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் முன்னுரிமை அளிக்கப்பட்டு இந்தியா அழைத்து வரப்பட உள்ளனர்.

இந்த விமானங்களை ஏர் இந்தியா நிறுவனம் இயக்குகிறது. எனவே அதற்கான கட்டணங்களை, ஏர் இந்தியா நிறுவனமே பயணிகளிடமிருந்து வசூலிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கூறியதாவது, இந்த ஒரு வார காலத்தில் தங்களால் எத்தனை பேரை அழைத்து வர முடியுமோ அந்தளவிற்கு துரிதமாக செயல்பட்டு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளோம். அந்தந்த மாநில அரசுகள், தாயகம் திரும்பியவர்களுக்கு உடனடியாக அளிக்க வேண்டிய சிகிச்சைகள், தனிமைப்படுத்தலுக்கான தகவமைப்புகள் உள்ளிட்டவைகளை தயாராக வைத்துக்கொள்ள அறிவுறுத்துவதாக அவர் தெரிவித்தார்.

சமுத்திர சேது ஆபரேசனில் பயன்படுத்தப்பட்ட ஐஎன்எஸ் ஜலாஸ்வா , ஐஎன்எஸ் மகர் கப்பல்கள், மாலத்தீவுக்கும், ஐஎன்எஸ் ஷர்துல் கப்பல் துபாய்க்கும் புறப்பட உள்ளது.

இம்முறை 2 லட்சத்தும் மேற்பட்ட இந்தியர்கள் அழைத்து வரப்படுவார்கள் என்றும் இதுவே மிகப்பெரிய சாதனை என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதற்கு முன்னதாக, ஈராக் உள்நாட்டுப்போரின் போது குவைத்திலிருந்து 1.7 லட்சம் பேரை அழைத்து வந்ததே அதிகபட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியர்கள் விமானம் ஏறுவதற்கு முன்னரே, கொரோனா சோதனைகள் செய்யப்படும். கொரோனா அறிகுறிகள் இல்லாதவர்களே விமானத்தில் ஏற அனுமதிக்கப்படுவர் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அவர்கள் இந்தியா வந்தடைந்தவுடன், அவர்களது பெயர்கள் ஆரோக்கிய சேது செயலியில் பதிவு செய்யப்படும். அவர்கள் 14 நாட்கள் வீட்டிலோ, மருத்துவமனையிலோ கட்டணம் செலுத்தி தனிமையில் இருக்க வேண்டும்.இதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். கேரளா திரும்புபவர்கள், 7 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு பின் அவர்களுக்கு RT-PCR சோதனை மேற்கொள்ளப்படும், அதில் நெகட்டிவ் என்று முடிவுகள் வருபவர்கள் மட்டுமே வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்படுவர். வீட்டிற்கு சென்றாலும், அவர்கள் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும். கேரளாவிற்கு திரும்ப 4.42 லட்சம் மக்கள் தங்கள் பெயரை பதிவு செய்திருப்பதாகவும், அவர்களுக்கு தேவையான சோதனைகளை மேற்கொள்ள அரசு தயாராக இருப்பதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

வருபவர்களை தனிமைப்படுத்த 2.50 லட்சம் படுக்ககைகள் தயாராக உள்ளது. உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் 1.63 லட்சம் படுக்கைகள் உருவாக்கப்பட்டு தனிமைப்படுத்துதல் நடவடிக்கைக்கு தயாராக உள்ளதாக அவர் மேலும் கூறினார்.

Leave A Reply