நாடு முழுவதும் தியாகத் திருநாள் பக்ரீத் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்

Share

நாடு முழுவதும் இன்று, தியாகத் திருநாள் பக்ரீத் பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இறைவனின் தூதர்களாக இஸ்லாமியர்களால் நம்பப்படுபவர்களில் ஒருவர் இப்ராகிம். இவர் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பு,  இன்றைய ஈராக்கில் வாழ்ந்து வந்தார். நெடுநாட்களாக, குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்து வந்த இவருக்கு, இறுதியில் இவரின் இரண்டாவது மனைவி ஃஆசரா மூலம் ஓர் ஆண் மகவு பிறந்தது. இஸ்மாயீல் எனப் பெயரிடப்பட்ட அந்தக்  குழந்தையின் வழி வந்தவர்களே இன்றைய அராபியர்கள். இஸ்மாயீல், பால்யப் பருவத்தை எட்டியிருந்த பொழுது, அவரைத் தனக்குப் பலியிடுமாறு, கடவுள், இப்ராஹிம் அவர்களுக்குக் கனவின் மூலம் கட்டளையிட்டார்.

இதைப்பற்றி இஸ்மாயீலிடம் கூறிய இப்ராஹிம், அவரின் அனுமதியுடன் பலியிடத் துணிந்தபொழுது, சிஃப்ரயீல் எனப்படும் வானவரை அனுப்பி, இறைவன் அதைத் தடுத்தார். மேலும், ஓர் ஆட்டை இறக்கிவைத்த இறைவன், இஸ்மாயீலுக்குப்  பதில் அந்த ஆட்டை அறுத்துப் பலியிடுமாறு இப்ராஹிமிற்கு கட்டளையிட்டார். மேற்கூறிய இந்த சம்பவத்தின் அடிப்படையிலேயே, இப்ராஹிமின் தியாகத்தை நினைவு கூறும் வகையில், இஸ்லாமியர்கள் தங்கள் வீட்டில் ஆடுகளைப் பலியிட்டு, பக்ரீத் பண்டிகை கொண்டாடுகின்றனர். உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்படி, நாடு முழுவதும் இன்று, தியாகத் திருநாள் பக்ரீத் பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று காலையிலேயே டெல்லியில் புகழ்பெற்ற ஜும்மா மசூதியில் பெருமளவுக்கு இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தினர்.  மசூதிக்கு செல்வதற்கு முன்பாக அவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் சமூக இடைவெளி விட்டு அமர்ந்து அவர்கள் தொழுகையில் ஈடுபட்டனர். ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி வாழ்த்துக்களை தெரிவிப்பது  இஸ்லாமியர்கள் வழக்கம். ஆனால், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, கட்டி தழுவாமல் சமூக இடைவெளியை கடைபிடித்து வாழ்த்துக்களை தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தை பொருத்தவரை 7-ம் கட்டமாக ஊடங்கு நீட்டித்தபோதும், கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை. எனவே, இஸ்லாமிய சகோதர்கள், தங்களது வீடுகளில் இருந்தே தொழுகை  நடத்தினர். இதனைபோல், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மத்திய சிறுபான்மை விவகாரத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி தனது இல்லத்தில் தொழுகை நடத்தினர்.

Leave A Reply