ஜாதிய பிரிவினைவாதத்தை திமுக அரசு ஒழிக்க முடியுமா?

Share

தமிழ்நாட்டின் 2021 சட்டமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றியை திமுக அடைய போவது உறுதியாகிவிட்டது. அப்படி வென்ற பின்பு கல்வி, வேலைவாய்ப்பு, உள்கட்டமைப்பு,பொருளாதார சிக்கல்களை தீர்க்க திமுகவிடம் அறிவார்ந்தவர்கள் பலர் இருக்கின்றனர்,அது பற்றிய கவலை இல்லை, ஆனால் நம் மனதை வாட்டும் கவலையில் முக்கியமான ஒன்று, தமிழ் சமூகம் ஒரு கடைந்தெடுத்த ஜாதிய சமூகம் என்பதில் யாருக்கும் இருவேறு கருத்திருக்காது.

இங்கு தான் நம் கவலைக்கான முக்கிய புள்ளி தொடங்குகிறது….

இன்று இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக சிலபல வட மாநிலங்களில் மத அரசியலின் மூலம் பிரித்தாளும் அயோக்கியத்தனத்தால் வென்றிருக்கிறது. தமிழகத்தில் அதன் மதவெறி அரசியல் எடுபடாமல் போனதை உணர்ந்து ஜாதிய அரசியலை கடுமையாக பல்வேறு கொடூர திட்டங்களுடன் முன்னெடுக்க தொடங்கி இருக்கிறது. இதற்கு இன்று தமிழ்நாட்டை ஆள்வதாக சொல்லும் அடிமை அதிமுகவின் அதிகாரத்தை சுவைக்க தங்களின் சுயநலத்துக்காக இந்த ஜாதிய பிரித்தாளும் பாசிச பாஜகவின் செயலுக்கு துணைபோய்க்கொண்டிருக்கிறது…

தென் தமிழகத்தில் குறிப்பிட்ட பட்டியல் இன மக்களை குறிவைத்து அந்த மக்களை குழப்பத்தில் ஆழ்த்தி அரசியல் செய்ய நினைக்கிறார்கள். அதன் விளைவாக அச்சமூகத்தில் ஒரு பிரிவு தங்களை பிற்படுத்தப்பட்டவர்களாக மாற்றுங்கள் என பேசும் இழிவான செயலை ஒருபுறம் தாண்டி, மறுபுறம் தற்போது அந்த சமூகத்தில் ஏழு பிரிவுகளை ஒரு குறிப்பிட்ட பெயரில் அழைக்கும் அரசாணையை வெளியிட்டு அதே சமூகத்தில் பிளவை தூண்டி வாக்குகளை பெற நினைக்கிறது பாசிச பாஜக…

இதற்கு எந்த எதிர்வினையும் ஆற்றாமல் தங்களின் சொந்த நலனை பாதுகாத்துக்கொள்ள இந்த சமூகநீதிக்கெதிரான அரசியல் வலையில் தானாய் போய் விழுகிறது அடிமை அதிமுக கும்பல்…
ஏற்கெனவே தமிழகத்தின் இருபெரும் சமூகங்களை எதிர் எதிரே நிறுத்தி அரசியல் ஆதாயம் தேடும் வேலையை கச்சிதமாக அடிமைகளின் உதவியோடு செய்து ஓரளவு வெற்றியையும் பெற்றிருக்கிறது மத, ஜாதி வெறி பாசிச பாஜக..

வட தமிழகத்தில் போலி சமூகநீதி பேசும் வீணாய் போன ஒரு மருத்துவர், தெற்கில் அதே போல சமூகநீதியை மறுக்கும் இன்னொரு வீணாய்போன ஒரு மருத்துவர் மற்றும் ஆளும் அடிமைகளான இரட்டை தலைமை கொள்ளைக்கார அமைச்சரவை கும்பல் என கொரோனா தொற்று போல தமிழ்நாடெங்கும் வெறிகொண்ட ஜாதிய அரசியலை முன்னெடுக்கிறது பாசிசம்…

திராவிட இயக்க முன்னோடிகள்,பெரியார் மற்றும் ஆட்சியில் தலைமையேற்ற பேரறிஞர் அண்ணா,கலைஞர் எனும் திராவிட இயக்க முதல்வர்களின் கீழ் சமூகநீதி அடிப்படையில் ஒன்றிணைந்த தமிழ்நாட்டு மக்களை, ஜாதிய அரசியலை வாக்கரசியலின் ஒரு கூறாக மாற்றிய எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற ஆட்சியாளர்களின் காலத்தை விட ஜாதியை வைத்து தமிழர்களை கூறுபோட்டு அரசியல் கும்மி அடிக்க நினைக்கினது பாசிச வலதுசாரி பாஜக மற்றும் அதற்கு துணைபோகும் சுயநல அதிமுக அடிமை கூட்டம்…

ஒரு திட்டமிட்ட கொடும் பாசிச ஜாதிய பிரிவினைவாத காலகட்டத்துக்குள் மெதுவாக நுழைந்துக்கொண்டிருக்கிறது தமிழ்நாடு எனும் சமூகநீதியை ஆணிவேராக கொண்ட திராவிடர்களின் மாநிலம், எச்சரிக்கை எச்சரிக்கை…….

பழனிவேல் மாணிக்கம்

Leave A Reply