சசிகலாவுக்காக காத்திருக்கும் பாஜாக நயினார் நாகேந்திரன்

Share

தமிழ்நாடு பாஜகவில் அண்மையில் அறிவிக்கப்பட்ட நிர்வாகிகள் பட்டியல் சில முக்கிய நிர்வாகிகளை அதிருப்திக்கு ஆளாக்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக வேதாரண்யம் முன்னாள் எம்,எல்.ஏ. வேதரத்தினம் பாஜகவில் இருந்து விலகி திமுகவில் சேர்ந்தார். அதேபோல தென் மாவட்டத்தில் பாஜகவுக்கு பலமாக இருந்த முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரனும் அதிருப்திப் பட்டியலில் இருக்கிறார்.

தமிழிசை சௌந்தர்ராஜன் தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்தபோது அவர் தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டார். அதையடுத்து தமிழக பாஜக தலைவர் யார் என்ற எதிர்பார்ப்புப் பட்டியலில் நயினார் நாகேந்திரன் பெயுரும் இருந்தது. ஆனால் எல். முருகன் தலைவராக நியமிக்கப்பட்டார். அதுவே நயினாருக்கு ஏமாற்றம் அளித்திருந்த நிலையில், நிர்வாகிகள் மாற்றத்திலாவது தனக்கு பொதுச் செயலாளர் போன்ற வலிமையான பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால் மீண்டும் நயினார் துணைத் தலைவராகவே நியமிக்கப்பட்டிருக்கிறார். இது நயினாரை மேலும் அதிருப்தியில் ஆழ்த்திவிட்டது என்கிறார்கள் அவரையறிந்தவர்கள்.

நயினாரின் நகர்வுகள் குறித்து நெல்லை வட்டாரத்தில் விசாரித்தோம்.நயினார் நாகேந்திரன் நேரடியாக டெல்லியில் அமித் ஷாவை நேரில் சந்தித்து கட்சியில் சேர்ந்தவர். ஆனபோதும் தேசியத் தலைமையோ மாநிலத் தலைமையோ அவரை மதிக்கவில்லை. இந்த நிலையில் அவர் பாஜகவில் தொடர்வதை விரும்பவில்லை.

அரசியலாக இருந்தாலும், பிசினஸாக இருந்தாலும் ஒரு முடிவெடுப்பதற்கு முன்னர் குமரி பகவதியம்மன் கோயிலுக்குச் சென்று மனதார வழிபடுவார் நயினார். நேற்று முன் தினம் கூட குமரியம்மன் கோயிலுக்குச் சென்றுள்ளார். அதன் பிறகு சில நண்பர்கள் நயினாரிடம் பேசிக் கொண்டிருந்தபோது, ‘என்னண்ணே மூவ்மெண்ட்ல இருக்கிறதா சொல்றாங்களே?’ என்று கேட்டுள்ளனர். அதற்கு அவர் சிரித்துக் கொண்டே,‘வெயிட்டிங் வெயிட்டிங்’ என்று பதிலளித்தார்.

நயினார் வெயிட்டிங் என்று சொன்னது யாருக்காக என்பதுதான் இப்போது தென் மாவட்ட அரசியல் வட்டாரத்தில் நடக்கும் விவாதம். நயினாரின் அரசியல் வாழ்வு சசிகலாவால்தான் முன்னுக்கு வந்தது. சசிகலா சிறையில் இருந்து வெளியே வரும் வரை காத்திருப்பது என்ற முடிவில் இருப்பதாக அவரை அறிந்தவர்கள் சொல்லுகிறார்கள். அதேநேரம் சில மாதங்களுக்கு முன்பு பாஜக துணைத் தலைவராக இருந்து ஸ்டாலினை அடுத்த முதல்வர் என்று பகிரங்கமாக பாராட்டி, பின் திமுகவிலேயே சேர்ந்துவிட்ட அரசகுமார் இப்போதும் நயினாரிடம் பேசி வருகிறார். ‘உங்களை மாதிரி ஆளுங்க திமுகவுல இருக்கணும். இங்க வந்துடுங்க’ என்று அரசகுமார், நயினாருக்கு அழைப்பு விடுத்து வருகிறார். இன்னொரு பக்கம் நயினாரின் ஹோட்டல் தொழில் நட்பு மூலம் அவர் திமுகவின் தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் கேஎன். நேருவுடனும் தொடர்பில் இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆக நயினார் பாஜகவில் இருந்து நகர்ந்துகொண்டிருக்கிறார். திமுக பக்கம் செல்கிறாரா, அதிமுக பக்கம் செல்கிறாரா என்பது விரைவில் உறுதியாகும்” என்கிறார்கள்.

Leave A Reply