எள்ளி நகையாடப்படும் பள்ளிக்கல்வித் துறை – LRJ

Share

தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களின் கைகளில் ஜாதிக்கயிறு கட்டும் வழக்கம் எப்போது முதல் தொடங்கியது? யார் ஆட்சிக்காலத்தில் அது ஒரு இயக்கமாய் ஊக்குவிக்கப்பட்டது? யாரால்? எதற்காக?
இதையும் பள்ளி ஆசிரியர்கள் இரண்டாம் தாயாக இருந்து நல்வழிப்படுத்த வேண்டும் என்பாரோ பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்?

பள்ளி மாணவர்களின் கைகளில் இருக்கும் ஜாதிக்கயிறுகளை நீக்கவேண்டியது யார்? பெற்றவர்களா? ஆசிரியர்களா? இதில் யார் முதன்மைப் பொறுப்பேற்க வேண்டும்? அமைச்சர் விளக்குவாரா? அல்லது வழிகாட்டுவாரா?

பள்ளிகளில் அதிலும் குறிப்பாக அரசு பள்ளிகளில் ஜாதி, மத, புற அடையாளங்களின் இடம் என்ன? எதுவரை அனுமதிக்கலாம் அல்லது பொறுத்துக்கொள்ளலாம்? எதை எதையெல்லாம் அனுமதிக்கலாம்? எதற்கெல்லாம் தடை விதிக்க லாம்? பள்ளிகளில் பொதுச்சீருடையின் இடம் என்ன? அதன் முக்கியத்தும் அல்லது அர்த்தம் என்ன? கல்விநிலையங்களின் குறைந்தபட்ச அடிப்படை ஒழுக்கம் கட்டுப்பாடுகளின் அவசியம் என்ன? அளவென்ன? யார் நிர்ணயிப்பது? எதன் அடிப்படையில்? யார் பொறுப்பேற்பது?

சமூக ஊடகங்களில் 24/7 மணிநேரமும் 365 நாட்களும் ஓய்வே இல்லாமல் முற்போக்கு சந்நதம் வந்து அருள்வாக்காய் அருளும் முற்போக்கு சாமியாடிகள் இதற்கான பொறுப்பையும் பள்ளி ஆசிரியர்களின் கணக்கில் எழுதிவிடுவார்களா? அல்லது இதுகளை பெத்ததுகளுக்கும் இதில் முதன்மை பொறுப்புண்டு என்பார்களா?

மாணவர்களின் கைகளில் கடந்த இருபதாண் டுகளில் புதிதாய் முளைத்த ஜாதிக்கயிறுகளை நீக்கும் முன் அமைச்சர்களின் கைகளில் இருக்கும் ஜாதிக்கயிறுகளை யார் நீக்குவது? முதல்வரா? அல்லது வேறு யாருமா?

இதில் ஜாதிச்சங்க அரசியலை சில ஜாதிகள் மட்டுமே செய்வதாக கற்பிக்கப்படும் பிரச்சாரம் எந்த அளவு சரி? ஜாதி ஒழிப்பு போராளிகளாக வலம் வரும் தலித்திய அரசியல் உண்மையில் ஜாதி ஒழிப்புக்கானதா? அல்லது மற்ற ஜாதிச்சங்க அரசியலைப்போல அதுவும் எண்ணிக்கை வலுவுள்ள இரண்டு தலித் ஜாதிகளில் இன்னொரு ஜாதியை அணிதிரட்டலுக்கானதா?
தலித் அரசியல் ஜாதி ஒழிப்புக்கானது என்பீர் களானால் மாஞ்சோலை விவகாரத்தில் உண்மையில் நடந்தது என்ன?

எல்லா தேயிலைத்தோட்ட சம்பள உயர்வு பிரச்சனையைப்போல மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர் சம்பள உயர்வு விவகாரமும் நீண்ட இழுத்தடிப்புக்குப்பின் சுமுகமாய் முடிவுக்கு வந்துகொண்டிருந்தது. அந்தச் சூழலில் தன் சுயஜாதி அரசியலுக்காக அடிப்படையில் தொழிற்சங்க பிரச்சனையாக சென்றுகொண்டிருந்த ஒரு விவகாரத்தை அப்பட்டமான ஜாதிச்சங்க பிரச்சனையாக திட்டமிட்டு திசைதிருப்பினர். ஆளுக்கு இரண்டு ஏக்கர் தேயிலைத்தோட்ட நிலம் வாங்கித்தருகிறேன் என்று பொய்வாக்குறுதி கொடுத்து தூண்டிவிட்டு போராட்டம் நடத்தினார்கள். இதையடுத்து, தாமிரபரணியில் தன் ஜாதிமக்களையே பலிகொடுத்த சம்பவம் நிகழ்ந்தது. இத்தகைய கேவலமான ஜாதிச்சங்க அரசியல்வாதியை தன் அரசியல் ஆதர்ஷமாகவும் ஜாதி ஒழிப்பு போராளியாகவும் “படம்” காட்டும் சுயஜாதிப்பற்றாளர்கள் ஏதோ ஜாதிக்கு எதிரான மிகப்பெரிய புரட்சி இயக்குநர்களாக உலா வரும் ஊரில் அதையும் பேசத்தானே வேண்டியிருக்கிறது? அந்த மாஞ்சோலை மாவீரன் இன்று எங்கே போய் மண்டியிட்டிருக்கிறார்? அதைப்பார்த்த பின்னும் அவரை ஆராதிப்பவர்களின் அடிப்படை அரசியல் எது? ஜாதி ஒழிப்பா? ஜாதிச்சங்கமா?

தமிழ்நாட்டில் இது எதிர்புரட்சிகளின் காலம். எந்தவிதமான குறைந்தபட்ச சமூகப்பொறுப்பும் இல்லாமல் தன்முனைப்போடு இயங்கும் சுயமோக உதிரிகளும் lumpanகளும் போராளிகளாக உலாவரும் ஊரில் இத்தகைய கொடூரங்கள் இன்னும் எத்தனை அரங்கேறுமோ?

தமிழ்நாட்டின் தற்கால ஆகப்பெரும் ஜாதிச்சங்க சீரழிவுகள் இரண்டு: கடந்த 25 ஆண்டுகளில் “நடராஜ அருளோடும் ஆசியோடும்” திருச்சிக்கு தெற்கே தமிழ்நாட்டில் வலுப்பெற்ற பல்வேறு ஜாதிச்சங்கங்களின் கொடூரமும் அதற்கும் முன்பே ராமதாஸர்கள் பற்ற வைத்த அக்கினிகுண்ட நெருப்பு வட மாவட்டங்களில் பற்றி எரிந்த தும் முதன்மைக்காரணங்கள். அவற்றுக்கு எதிர் வினையாக ஜாதி ஒழிக்க அவதாரம் எடுத்ததாக கூறிக்கொண்டு வளர்ந்து வளம் பெற்ற so-called தலித் அரசியலும் ஜாதிச்சங்கமாக மட்டுமே சீரழிந்து இருக்கிறது; இயங்குகிறது என்பது இரண்டாவது காரணி. இதன் அடுத்த பரிணாமம் எங்கே போய் முடியும்? வேறெங்கே? பிணங்கள் மிதந்தாலும் புனிதம் கெடாத இந்துத்துவம் என்னும் கங்கையில் தான்.

பின்குறிப்பு: இந்த ஜாதிக்கயிறு விவகாரத்துக்கு பள்ளிக்கல்வித்துறையோ அமைச்சரோ நேரடியாக பொறுப்பாக முடியாதுதான். ஆனால் கடந்த ஓராண்டாக தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வித்துறை இந்த ஆட்சியில் தடுமாறும் அளவுக்கு கேவலமாக முன்பு திமுக ஆட்சிக்காலங்களில் தடுமாறவில்லை. முதல்காரணம் IAS அதிகாரிகள் இந்த துறைக்கு பொறுப்பேற்று நடத்துவது. இந்தத் துறை குறித்த குறைந்தபட்ச அனுபவ பட்டறிவு கூட இல்லாமல் அவர்கள் செய்துகொண்டிருக்கும் துக்ளக் தர்பார் கொஞ்ச நஞ்சமல்ல. சின்ன உதாரணம் இந்த ஆண்டின் மேநிலைப்பள்ளிகளின் செய்முறைத் தேர்வுகள் ஒரே வாரத்தில் நடத்தும் முடிவு. அதை பள்ளிக்கல்வியில் அனுபவம் உள்ள கத்துக்குட்டி கூட செய்யாது.

ஆனால் ஒரு IASஉம் அமைச்சரும் செய்கிறார்கள். பள்ளி ஆசிரியர்கள் தலையில் அடித்துக்கொள்கிறார்கள். இரண்டாவது அமைச்சராக எந்த நிர்வாக முன் அனுபவமும் அற்ற; தமிழ்நாட்டின் தனித்துவமான அரசு துறைகளில் ஒன்றான பள்ளிக்கல்வித்துறை பற்றிய குறைந்தபட்ச அறிவோ அறிமுகமோ கொள்கைப் பார்வையோ தொலைநோக்கு திட்டமோ பொறுப்போ இல்லாத ஒரு கத்துக்குட்டியை இந்த சிக்கலான துறைக்கு அமைசாராக்கிய முதல்வரின் முடிவு. தன் நண்பனின் மகனும் தன் பட்டத்து இளவரச மகனின் தோழனுமானவருக்கு முக்கிய அமைச்சர் பதவியை பரிசளித்தாரே தவிர பள்ளிக்கல்வித்துறைக்கு உகந்த அமைச்சரை அவர் நியமிக்கவில்லை.

அதனால்தான் அரசு பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களை பள்ளிக்கூட வகுப்பறையிலேயே அடிக்க கை ஓங்கும் அளவுக்கு நிலைமை தீவிரமான கொதிநிலையைக்கூட “ஆசிரியர்கள் இரண்டாம் தாயாக இருந்து திருத்தி வழிகாட்ட வேண்டும்” என்கிற அறிவிப்போடு எளிதில் கடக்க முயல்கிறார். சமூகத்தில் பரந்துபட்ட அதிர்வலைகளை ஏற்படுத்திய ஒரு விஷயத்தை தொடர்புடைய துறையின் அமைச்சர் இதைவிட கெவலமாக கையாள முடியாது. வேறு பல விஷயங்களிலும் இதே மாதிரிதான் அவரது ஓராண்டுகால அனுபவம் “சிறப்பாக” இருப்பதாக ஆசிரியர்களே குமுறுகிறார்கள். முடிந்தால் உங்களுக்கு தெரிந்த அரசு பள்ளி ஆசிரியர்களிடம் கேட்டுப்பாருங்கள். •

Leave A Reply