மதவெறியும் தேசிய வெறியும் சீரழித்த இலங்கை – சிராஜ் மஷ்ஹூர்

Share

இலங்கை போராட்டக் களத்தில் தங்கள் எதிர்காலம் சீரழிக்கப்பட்ட கோபத்தில் கூடியிருக்கிறார்கள் மக்கள். அந்தக் கூட்டத்தில்,

“அபி பயய்த? (நமக்கு பயமா?)” என்று ஒலிபெருக்கியிலிருந்து ஒரு குரல் கேட்கிறது.

“நே…நே… (இல்லை இல்லை..)” என்று சுற்றியிருப்போர் உரத்துச் சொல்கின்றனர்.

ஜனாதிபதி செயலகத்தைச் சூழவும், காலிமுகத் திடலிலும் அமைக்கப்பட்டிருக்கும் மக்கள் போராட்டக் களம், முக்கியமானதொரு அரசியல் எதிர்ப்புணர்வு வடிவம். அதை ராஜபக்ஷ கம்பனி குறைத்து மதிப்பிட்டார்கள் என்பதுதான் அவர்களது வரலாற்றுத் தவறு.

அங்கிருப்போருள் பெருந்தொகையானோர் இளைய தலைமுறையினர். தங்களது எதிர்காலம் சூறையாடப்பட்டு விட்டது என்ற அவர்களது தார்மீக கோபம்தான் அவர்களைத் தூண்டி விட்டது. அடங்க மறுக்கும் கலகக் குரல் அது.

சிலர் இதனைக் குறைத்து மதிப்பிட்டனர். இவ்வாறு குறைத்து மதிப்பிட்டோருள் ராஜபக்ஷ தரப்பும் ஆட்சியாளர்களும் அடங்குவர். ஆனாலும், படிப்படியாக நாட்டு மக்களது ஒட்டுமொத்த எதிர்ப்பின் திரட்சியாக இது வளர்ந்து வந்தது. ஊடகங்களினதும் சர்வதேச சமூகத்தினதும் கவனயீர்ப்பை இது பெறத் தொடங்கியது.

நாட்டு மக்களது உள்ளமும் உணர்வும் சங்கமிக்கும் இடமாக இது மாறிவிட்டது. இந்தப் போராட்டக் களத்தில் பல்வேறு வகையான முன்னெடுப்புகள் முகிழ்க்கத் தொடங்கின.

இலங்கையரின் பன்மைத்துவத்தை உணரும் வகையிலான, காட்சிகளை இங்கு தரிசிக்கக் கிடைத்தது. இங்கு இடதுசாரிகள் மட்டுமே இருப்பது போல சிலர் சித்தரிக்க முற்பட்டனர். ஆனால், அதை விட மாறுபட்டது. அங்கு பெரியோர், சிறியோர், வலதுசாரிகள், இடதுசாரிகள், ஆண்கள், பெண்கள், லிபரல்வாதிகள், தொழிற்சங்கத்தினர், வியாபாரிகள், சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள், மலையகத் தமிழர், பல்வேறு அரசியல் கட்சி சார்பானவர்கள், பல்வேறு சமயத்தவர்கள், மதகுருக்கள், தனியார்த் துறையினர், சமூக வலைத்தள பிரபலங்கள், கலைஞர்கள் என்று பலதரப்பட்டவர் இருந்தனர். பலர் வந்து போயினர்.

அங்கு அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களும் இடதுசாரி இளைஞர்களும் பலமிக்கவர்களாகை இருந்தனர் என்பது உண்மைதான்.

அவர்கள் இல்லாமல் போயிருந்தால், போராட்ட பூமியின் உறுதிப்பாட்டை- நிலைபேறான தன்மையை- தொடர்ச்சியைப் பேணுவது கடினமாக இருந்திருக்கும். அர்ப்பணிப்பு மிக்க இவர்களது பங்களிப்பைக் குறைத்து மதிப்பிட்டு விட முடியாது.
இப்படியான மக்கள் போராட்டத்தில், போராட்ட உணர்வைத் தொடர்ச்சியாக தக்கவைப்பது எவ்வளவு கடினம் என்பதை அனுபவ ரீதியாக உணர்ந்தவன் என்ற வகையிலேயே இதை வலியுறுத்தி- அடிக்கோடிட்டுச் சொல்கிறேன்.

மக்களை தொடர்ந்தும் ஈர்க்கும் வகையிலான பல்வேறு உத்திகளை இதன் ஏற்பாட்டாளர்கள் செய்து வந்தனர். பல்வேறு புத்தாக்க முயற்சிகள் அடிக்கடி செய்யப்பட்டன. மக்களைத் தக்க வைப்பதற்காக ஒருவிதமான ‘ ‘கொண்டாட்ட மனநிலை’ பேணப்பட்டது.

ஒரு மாத கால இடைவெளிக்குள், இது ஒட்டுமொத்த தேசத்தின் மனச்சாட்சியாக வடிவம் எடுத்து விட்டது. மக்களுக்கு இது விடுதலை உணர்வின் திரட்சியாகத் தெரிந்தது.

மறுதலையாக, அதிகாரத் தரப்புக்கு இது தொல்லையாகவும் தலையிடியாகவும் தெரிந்தது. இதைக் கலைக்க தருணம் பார்த்திருந்தனர்.

ஆயினும், மக்கள் போராட்டக் களம் வன்முறையற்றதாக – அமைதி வழியில் விடாப்பிடியாக இருந்தது. இது அரசாங்கத்திற்கும் ராஜபக்ஷ குடும்பத்திற்கும் பெரும் சவாலாக இருந்தது. கலைக்கவும் வேண்டும் கலைக்கவும் முடியாது என்ற நிலை.

சர்வதேச சமூகத்தின் பார்வை இந்த மக்கள் போராட்டக் களத்தில் நிலைகுத்தி இருந்தது இன்னொரு முக்கிய அம்சம். மேற்கு நாடுகளிடமும் IMF, உலக வங்கி போன்ற சர்வதேச நிறுவனங்களிடமும் கையேந்த வேண்டிய நிலை இருந்ததால், ஆட்சியாளர்கள் அடக்கி வாசிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்தனர்.

வேறு வழியின்றி கைகளைப் பிசைந்து கொண்டு, இரண்டக மனநிலையில் தடுமாறிக் கொண்டிருந்தனர்.

மறுபுறம், இந்த மக்கள் போராட்டக் களம் நாடளாவிய ரீதியில் பெரும் உந்துதலைக் கொடுத்தது. நாட்டின் பல்வேறு பாகங்களிலும் இதன் தாக்கத்தை- எதிரொலியை உணர முடிந்தது.

மே 06 ஆம் திகதி நாடு தழுவிய ஹர்த்தாலால் முழு நாடும் ஸ்தம்பித்து நின்றது. இந்த சிவில் ஒத்துழையாமை வளர்ந்து உறுதிப்பட்டு விட்டால், அரச இயந்திரம் முடங்கிப் போய் விடும் என்பதை ராஜபக்ஷ குடும்பம் நன்கு உணர்ந்திருந்தது.
இதை எப்படியாவது கலைத்து விட வேண்டும்- துடைத்தழிக்க வேண்டும் என்று தருணம் பார்த்திருந்தனர்.
அந்தோ பரிதாபம்!

அவர்கள் தேர்ந்தெடுத்தது மிகப் பழசுபட்டுப் போன பழைய பாணி உத்தியைத்தான். அதுவும் கைக்கூலிகளை அமர்த்தி அரசியல் நாடகம் ஆட முற்பட்டார்கள். இதை அடித்துக் கலைத்து விட்டு, இன்னும் அதிகாரக் கதிரையை நக்கிப் பிழைக்கலாம் என்று கனவு கண்டார்கள்.

அதனால்தான் குளவிக் கூட்டுக்குக் கல்லெறிந்தார்கள். அது பூமராங் போல ஏவிய அவர்களையே திருப்பித் தாக்கத் தொடங்கியிருக்கிறது.

விளைவு: ஒரே இரவில் நாடே பற்றி எரிகிறது. ராஜபக்ஷ குடும்ப இல்லமான மெதமுலான வளவ்வ பற்றி எரிவது- டீ.ஏ.ராஜபக்ஷ நினைவிடம் சிதைக்கப்பட்டதெல்லாம் வரலாற்றுக் குறியீடாக மாறியிருக்கிறது.

அதிகாரத்தில் இருப்போர் ஒரே தவறைத்தான் திரும்பத் திரும்ப செய்கிறார்கள். அவர்கள் வரலாற்றிலிருந்து ஒரு பாடத்தையும் கற்றுக் கொள்வதில்லை.

தாமும் குழம்பி மற்றவர்களையும் குழப்புகிறார்கள்.

தொடர்ச்சியான அரசியல் தவறுகளுக்கான பரிசே ராஜபக்ஷ கும்பலுக்கு இப்போது கிடைத்துக் கொண்டிருக்கிறது.
போராட்ட பூமியை அவர்கள் குறைத்து மதிப்பிட்டார்கள். முற்றிலும் வேறுபட்ட வரலாற்றுச் சூழலுக்குள் புதிய தலைமுறையின் மன உணர்வுகளைத் துல்லியமாகக் கணிக்கத் தவறினார்கள்.

55 வருட அரசியல் அனுபவம் கிழட்டு மைனாவுக்கு கைகொடுக்கவில்லை என்ற வரலாற்றுத் துயருக்கு நாமெல்லாம் சாட்சிகளாகி விட்டோம்.

எல்லோருக்கும் எல்லாக் காலமும் ஒரே விதமாய் அமைவதில்லை. போராட்டக் களத்தை வலிந்து அடக்க முற்பட்டால் அது வீறு கொண்டு எழும். வரலாறு திரும்பத் திரும்ப நிறுவிய உண்மை இது. இதற்கு இப்போது நாமெல்லாம் சாட்சிகளாக இருக்கிறோம்.

Siraj Mashoor
சிராஜ் மஷ்ஹூர்

Leave A Reply