எலிஸபெத் டெய்லரின் ஸ்டைல் – ஆதனூர் சோழன்

Share

லிஸா!

இந்தப் பெயர் ஒரு காலத்தில் உலகை ஆட்டிப் படைத்தது.

ஆம். ஹாலிவுட்டில் நடிகை எலிஸபெத் டெய்லரின் செல்லப் பெயர்தான் லிஸா.

அவருடைய காலத்தில், உலக அழகிகளில் ஒருவராக கருதப்பட்டவர். மயக்கும் நீல விழிகளில் ஆங்கிலப் பட ரசிகர்கள் மயங்கிக் கிடந்தனர். அவர்களுடைய இரவுத் தூக்கத்திற்கு துணையாக இருந்தவர் என்று கூட டெய்லரைச் சொல்லலாம்.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி குமரியான பிறகு ஹாலிவுட் சினிமாவை கலக்கியவர். இரண்டு ஆஸ்கர் விருதுகளைப் பெற்றவர். மூன்றுமுறை ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டவர்.
சலூன்களில் துவங்கி. பிரம்மச்சாரிகளின் அறைச் சுவர்கள் வரை படமாகத் தொங்கியவர்.

வெறுமனே கவர்ச்சிக் கன்னியாக மட்டுமல்ல… மிகச்சிறந்த நடிகையாகவும் இருந்தது தான் இவரது சிறப்பு.

ஹாலிவுட் சினிமாவில் இவர் அளவுக்கு புகழோடு நீடித்த நடிகை வேறு யாரும் இல்லை.

ஹாலிவுட் சினிமாவில் சிறந்த நடிகர்களுள் ஒருவரான ரிச்சர்டு பர்ட்டன் உள்பட 7 பேருடன் 8 முறை இவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.

அதெப்படி என்கிறீர்களா? ரிச்சர்டு பர்ட்டனை விவாகரத்து செய்துவிட்டு அடுத்த ஆண்டு மீண்டும் அவரையே மறுமணம் செய்துள்ளார்.

1932ம் ஆண்டு அமெரிக்க பெற்றோர்களுக்கு லண்டனில் பிறந்தவர் எலிஸபெத். இவருடைய தாய் நாடக நடிகை. தந்தை லண்டனில் கலைப் பொருள்கள் விற்கும் கடை நடத்தி வந்தார். 1937ம் ஆண்டு ஐரோப்பாவை போர் மேகங்கள் சூழ்ந்த நேரம். 7 வயது எலிஸபெத்துடன் அவரது தாய் அமெரிக்காவுக்குச் சென்றார்.

எலிஸபெத்தின் அம்மாவுடைய நண்பர் ஒருவர் வீட்டுக்கு வந்தார். அவர், குழந்தை எலிஸபெத்தைப் பார்த்து அசந்துவிட்டார். அவர் மூலம் யுனிவர்சல் பிக்சர்ஸ் என்ற பிரபல சினிமா கம்பெனியில் குழந்தை நட்சத்திரமாக எலிஸபெத் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

‘ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஒருவர் பிறக்கிறார்’ என்பதுதான் எலிஸபெத் நடித்த முதல் படம். அப்போது அவருக்கு 9வயது. 1942ம் ஆண்டு வெளிவந்த அந்தப் படத்துடன் யுனிவர்சல் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ஒப்பந்தத்தை முடித்துக் கொண்டது.

அதுவும் நல்லதுக்குத்தான். எம்ஜிஎம் நிறுவனம் எலிஸபெத்தை ஒப்பந்தம் செய்தது. ‘நேஷனல் வெல்வெட்’ என்ற படம் 1944ம் ஆண்டு வெளிவந்தது. அப்போது அவருக்கு வயது 12. அதன்பின்னர் தொடர்ச்சியாக படங்கள் வந்தன.

1950ம் ஆண்டு அமெரிக்காவில் பிரபலமான ஹில்டன் ஹோட்டல் குழுமத்தின் உரிமையாளரான நிக்கி ஹில்டனை எலிஸபெத் திருமணம் செய்தார். அவருடைய 22வது வயதில் நடந்த இந்தத் திருமணம் அடுத்த ஆண்டே விவாகரத்தில் முடிந்தது.

1952ம் ஆண்டு நடிகர் மைக்கேல் வில்டிங்கை திருமணம் செய்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தன. ஆனால். 56ம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டனர்.
அதன் பிறகுதான் எலிஸபெத்தின் சூப்பர் ஹிட் படங்கள் வெளிவரத் துவங்கின.

57ம் ஆண்டு ஹாலிவுட் தயாரிப்பாளர் மைக்டோட் என்பவரை எலிஸபெத் திருமணம் செய்தார். சொந்த விமானம் சொகுசு வாழ்க்கை என இருவரும் கலக்கினர். இருவருக்கும் லிஸா என்ற பெண் குழந்தை பிறந்தது. எலிஸபெத் திரும்பும் திசையெங்கும் கேமரா வெளிச்சங்கள்.

அது நீடிக்கவில்லை. 58ம் ஆண்டு தனது சொந்த விமானம் வெடித்து மைக் டோட் இறந்தார்.

வாழ்க்கையில் துணையிழந்திருந்தாலும் அவர் நடித்து வெளிவந்த இரண்டு படங்கள் அவரை ஆஸ்கர் விருதுக்காகப் பரிந்துரைக்கும் வகையில் சிறப்பாக இருந்தன.

58ம் ஆண்டு பிரபல பாடகர் எடீ பிஷருக்கு எலிஸபெத் காதல் வலை வீசினார். அவரும் சிக்கினார். யூதரான அவருக்கு ஏற்கெனவே திருமணம் ஆகியிருந்தது. ஆண்களை வேட்டையாடுபவர் எலிஸபெத் என விமர்சனம் எழுந்தது. எலிஸபெத் எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. யூதராக மாறி பிஷரை திருமணம் செய்தார்.

எம்ஜிஎம் நிறுவனத்தின் ஒப்பந்தத்தில் அவர் நடித்த ‘பட்டர்பீல்டு’ படம் 1960ல் வெளிவந்தது. விலைமாதாக நடித்த இந்தப் படம் அவருக்கு பிடிக்காத ஒன்று. ஆனால், இந்தப் படம்தான் அவருக்கு 61ம் ஆண்டுக்காக ஆஸ்கர் விருதைப் பெற்றுத்தந்தது.

அந்தப்படம் வெளி வந்த கையோடு ‘கிளியோபாட்ரா’ என்ற படத்தை ட்வென்டியத் செஞ்சுரி பாக்ஸ் நிறுவனம் தயாரித்தது. இதில் கிளியோபாட்ரவாக எலிஸபெத் நடித்தார். இதற்காக அவருக்கு அப்போதே 10 லட்சம் டாலர்கள் சம்பளமாக தரப்பட்டது. இன்றைய ரூபாய் மதிப்பில் 5 கோடி.

கிளியோபாட்ரா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் ரிச்சர்டு பர்ட்டன். அப்போதே இருவருக்கும் காதல் பிறந்து விட்டது. இந்தக் காதலை கத்தோலிக்க கிறிஸ்தவ தலைமையகமான வாடிகன் கூட கடுமையாக எதிர்த்தது.

64ம் ஆண்டு பிஷரை விவாகரத்து செய்துவிட்டு ரிச்சர்டு பர்ட்டனை திருமணம் செய்தார். பர்ட்டன் எலிஸபெத்திற்கு அளித்த பரிசுகள் அனைத்தும் வைரங்கள். அவை அப்போதும் இப்போதும் அரிதாகக் கருதப்படுபவை. 74ம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்தனர். ஆனால், 75ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

76ல் பர்ட்டனை விவாகரத்து செய்துவிட்டு அரசியல்வாதியான ஜான் வார்னரை திருமணம் செய்தார். 82ல் இருவரும் விவாகரத்து செய்தனர்.

போதை மருந்துகளுக்கு அடிமையாக இருந்த எலிஸபெத் 83ம் ஆண்டு மருத்துவமனையில் போய்த் தங்கினார்.

அங்கு தனக்கு உதவியாக இருந்த கட்டடத் தொழிலாளியான லாரி போர்ட்டென்ஸ்கியை 91ம் ஆண்டு திருமணம் செய்தார். இது அவருக்கு 8வது திருமணம். திருமணத்தின் போது எலிஸபெத்திற்கு வயது 59. லாரிக்கு வயது 39.

ஏழு பேரைத் திருமணம் செய்திருந்தாலும் உங்களுக்கு பிடித்த மகத்தான காதல் யாருடன்? எனக் கேட்டால், இருவருடன் என்கிறார். காதல் ஒருமுறைதான் பூக்கும் என்பதை இவர் மறுக்கிறார். ரிச்சர்டு பர்ட்டன். மைக் டோட் ஆகியோருடன் தனது காதல் மகத்தானது என்கிறார்.

எலிஸபெத்திற்கு நகைகள் என்றால் அலாதி பிரியம்.

பிறந்து மூன்று நாட்கள் கண்விழிக்கவில்லையாம். கண்விழித்த போது தனது தாயின் மோதிரத்தைத்தான் பார்த்தாராம். இவரிடம் உள்ள நகைகள் அனைத்தும் அற்புதமானவை. கலை நயமிக்கவை. அபூர்வமானவை. பர்மிய சிவப்புக் கற்கள். வைரங்கள் என குவித்து வைத்துள்ளார்.

240.80 கேரட் வைரத்திலிருந்து 69.42 கேரட்டாக செதுக்கப்பட்ட கரடி வடிவ வைரத்தை ரிச்சர்டு பர்ட்டன் பரிசாக அளித்தார்.

1667ம் ஆண்டு தாஜ்மகால் வடிவத்தில் உருவாக்கப்பட்ட வைரம். 1500களில் பனாமா வளைகுடாவில் கண்டெடுக்கப்பட்டதாக கருதப்படும் அபூர்வ வகை முத்து போன்றவை பர்ட்டன் அளித்த பரிசுகளில் முக்கியமானவை.

1983ம் ஆண்டு எலிஸபெத்தின் நண்பரும் நடிகருமான ராக் ஹட்ஸன் எய்ட்ஸ் நோயால் இறந்தார். உடனே அந்த ஆட்கொல்லி நோயைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த தொண்டு நிறுவனம் ஒன்றை உருவாக்கினார்.

5 கோடி டாலர்களுடன் அறக்கட்டளை அமைத்துள்ளார்.

‘அமெரிக்க அதிபர் புஷ்ஷூக்கு எய்ட்ஸ் நோய் குறித்த அக்கறை இல்லை; அவருக்கு எய்ட்ஸ் என்கிற வார்த்தையை சரியாக உச்சரிக்கக் கூடத் தெரியாது” என எலிஸபெத் கிண்டல் செய்தார்.

இவருடைய படுக்கையறை மிகப் பெரியது. உயரமான ஒரு மரத்தின் உச்சியில் கட்டப்பட்ட வீடு போன்ற தோற்றத்துடன் அது இருக்குமாம். புத்துணர்ச்சி பெற வேண்டுமென்றால் அங்கே போய் ஒளிந்து கொள்வாராம்,

எலிஸபெத் டெய்லரை எப்போதும் போல இயல்பாக வெளியே நீண்ட நாள் காணவில்லை என்றால் ஏதேனும் ஒரு பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருப்பார்.

ஆம். தனது இளமையைத் தொடர்ந்து தக்க வைப்பதற்காக பலமுறை. உடலின் பல பாகங்களில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளார்.

இப்படித்தான் 2005 மே மாதம் அவரை பொது நிகழ்ச்சிகள் எதிலும் காணவில்லை. உடனே அவருக்கு அல்ஜைமர் நோய் தாக்கிவிட்டது. கிட்டத்தட்ட மரணத்தின் வாசலுக்கே சென்றுவிட்டார் என ஒரு பத்திரிகை எழுதிவிட்டது.

அமெரிக்காவில் பரபரப்பு. ஜூன் 1ம்தேதி எலிஸபெத் தொலைக்காட்சிகளில் தோன்றினார்.

“எனக்கு ஒன்றுமில்லை. என்னைப் பார்த்தால் சாகப்போகிறவள் போலவா இருக்கிறேன்” என்று கேள்வி எழுப்பிவிட்டுச் சென்றார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் விவாகரத்து எளிதான விஷயமா என்று எலிஸபெத்திடம் பெண் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர் அளித்த பதில் இது…
‘முதல்முறைதான் வலிக்கும். பின்னர் பழகிவிடும்’

இதுதான் எலிஸபெத்தின் ஸ்டைல்! •

Leave A Reply