கற்றுக்கொடுத்த கன்னித்தீவு – ஆதனூர் சோழனின் நினைவுக் குறிப்புகள்

Share

அலங்காநல்லூர் பள்ளிக்கூடத்திற்கும் மற்ற கிராமத்து பள்ளிக்கூடங்களுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு.

மூன்றாம் வகுப்பிலேயே எழுத்துக்கூட்டி வாசிக்கவும், ஆங்கில எழுத்துகளை எழுதப் பழகவும் கற்றுக் கொடுத்துவிடுவார்கள்.

எங்கள் வீட்டில் தாத்தாவும் அப்பாவும் தினத்தந்தி படிப்பார்கள். எனது அம்மாவும் எழுத்துக்கூட்டி படிக்கும்.

நான் முதன்முதலில் எழுத்துக்கூட்டி வாசித்தது தினத்தந்தியில் வந்த கன்னித்தீவும், துப்பறியும் கதையும்தான். அதுபோக, ஆண்டிப்பண்டாரம் என்று ஒரு துணுக்கு இருக்கும். அதில் ஏதேனும் ஒரு பாடல் வரி இடம்பெறும்.

அன்றைக்கு நான் வாசித்த கதையை நண்பர்களுக்கு சொல்வேன். என்னோட அப்பா, நான் எழுத்துக்கூட்டி வாசிப்பதை ஆர்வத்துடன் கேட்டது இன்னும் எனது கண்ணுக்குள் இருக்கிறது.

எழுத்துக்கூட்டி வாசித்தது மட்டுமின்றி, எழுத்துக்கூட்டி எழுதவும், பாடல் வரிகளை மாற்றி எழுதவும் முடிந்தது. இது கூடப்படிச்ச பொண்ணுக்கு கடிதம் எழுதும் அளவுக்கு போனால் என்னாகும்?

மூன்றாம் வகுப்பில் அழகு டீச்சர்தான் வகுப்பாசிரியர். நிஜமாகவே அழகாக இருப்பார். எங்கள் விறகுக்கடையில் விறகு வாங்குவார். அதனால் குடும்பப் பழக்கமாகிவிட்டார்.
தினமும் காலை வகுப்பு தொடங்கியதும் எழுத்துக் கூட்டி வாசிக்கச் சொல்வார். பிறகு பாட்டுப் பாடச் சொல்வார்.

பெண்பிள்ளைகளில் பரமேஸ்வரி என்ற பெண்மீது எனக்கு ஈர்ப்பு அதிகம். ரொம்ப நீட்டா வருவாள். நல்ல கலரா இருப்பாள். ரெண்டுபேரும் நல்லா பேசிக்குவோம். என்னுடன் படிக்கும் பெண்களில் பலர் விறகுக்கடைக்கு அவுங்க அம்மாவுடன் வருவார்கள்.

இப்போ இருக்கிற மாதிரி அப்போ அலங்கா நல்லூர் பெரிய ஊர் இல்லை. ஸ்கூல் முடிஞ்சதும் விறகுக்கடையில் வேலை இல்லை என்றால், சினிமா பார்க்கப் போகும் வேலை இல்லை என்றால் ஊர் சுற்றுவதுதான் வேலை.

புடிச்ச பொண்ணுக வீட்டைப் பக்கம் சுற்றுவது அதில் முக்கியமான வேலை. பரமேஸ்வரி வீட்டைப் பக்கம் போனா, அவளுடைய சிரிப்பு கிடைக்கும். அது எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

எனக்கு கொக்கோ மிட்டாய் ரொம்ப பி¤டிக்கும். இப்போ வர்ற கொக்கோ மிட்டாய் நாக்கை புண்ணாக்கிடுது. அப்போ சாப்பிட்ட மிட்டாய் டேஸ்ட் இப்போவும் நாக்கில் இருக்கிறது. ஒரு பாக்கெட் வாங்குவேன். நண்பர்களுக்கும் கொடுப்பேன். குறிப்பா பரமேஸ்வரிக்கு கொடுப்பேன். பரமேஸ்வரியையும் என்னையும் பரமேஸ்வரியையும் சேர்த்து நண்பர்கள் பட்டையக் கட்டிவிடுவானுக.

அவளோ, தினமும் மல்லகைப் பூ இல்லாமல் வரமாட்டாள். ரெட்டை ஜடை போட்டு ரொம்ப நீட்டா வருவாள். இதிலெல்லாம் ஈர்க்கப்பட்ட மயக்கத்தில், ஒருநாள், மல்லிகைப் பந்தலிட்டு மணம் முடிப்போமா? என்று எழுதி அவளிடம் கொடுத்துவிட்டேன்.

அவள் அதைக் கொண்டுபோய் எண் கண்ணெதிரே அழகு டீச்சரிடம் கொடுத்தாள். தூண்டிவிட்ட நண்பர்கள் பதுங்கினார்கள்.

“எனக்கெல்லாம் தெரியாதுப்பா” என்று வாய்க்குள்ளேயே முனகினார்கள்.

டீச்சர் அந்த கடிதத்தை படித்துவிட்டு

“சோழராஜன் இங்கே வா” என்றார். நான் பயந்துகொண்டே அவரிடம் போனேன். பக்கத்தில் அழைத்தார்.

“இது எந்த படத்தில் வரும் பாட்டு?” என்றார். நானும் உடனே…

“பணத்தோட்டம் படத்துல வர்ற பாட்டை மாத்தி எழுதினேன் டீச்சர்”

“எங்க பாடு”

“ஜவ்வாது மேடையிட்டு, சர்க்கரையில் பந்தலிட்டு” என்று பாடினேன்.

“ஒனக்கெல்லாம் இப்பவே மணம் முடிக்கனுமா? கல்யாணம்னா என்னடா?” என்று எனது காதை திருகியபடியே கேட்டார். “இரு சாயந்திரம் ஒங்கப்பாகிட்ட வந்து கல்யாணம் பண்ணிவைக்கச் சொல்றேன்” என்றார். நான் மிரட்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தேன்.

சாயந்திரம் சொன்னது மாதிரியே ஸ்கூல் விட்டு விறகுக்கடைக்கு வந்தார். நல்லவேளை அப்பா இல்லை. அம்மா மட்டும்தான் இருந்துச்சு.

நான் பயந்து வீட்டுக்குள் போய் உட்கார்ந்து கொண்டேன். அம்மாவிடம் டீச்சர் என்ன சொன்னாங்கனு தெரியாது. கொஞ்ச நேரத்துல போய்ட்டாங்க. வீட்டுக்குள் வந்த அம்மா, மூலையில் உட்கார்ந்திருந்த என்னை,

“ஒனக்கெல்லாம் இப்பவே கல்யாணம் தேவைப்படுதோ” என்று கொமட்டில் குத்துச்சு. அவ்வளவுதான்.

ஆனால், இரவு அப்பா வந்து, தூங்கிக் கொண்டிருந்த என்னை எழுப்பினார். வழக்கமா எழுப்பி பேசுவார். அன்று எழுப்பியபோது, அவர் கையில் நான் எழுதிய துண்டுக்காகிதம் இருந்தது. தூக்கக் கலக்கத்தில் இருந்த என்னை தனது மடியில் அமரவைத்தார்.

இது அவருடைய வழக்கம். ஏனென்றால் அதிகாலை யில் ஏதாவது ஒரு இடத்துக்கு போய்விடுவார். அதனால், எப்போ வர்றாரோ அப்போ என்னை எழுப்புவார்.

“என்னா சாமி, எழுத்துக்கூட்டி எழுத பழகிட்டியா? இது யார் எழுதுனது?”

“நானுதான்” என்றவுடன் அவர் கைகள் என்னை இறுக்கியதை உணர முடிந்தது. அது இதமாக இருந்ததை உணரமுடிந்தது. அம்மா பக்கம் திரும்பிய அவர்…

“பெறகென்னடி… உன் பிள்ளைதான் எழுதியிருக்கான். எப்டியோ எழுதக் கத்துக்கிட்டான்லÓ என்றவர் என்பக்கம் திரும்பி “எழுதலாஞ் சாமி… பொம்பளப் பிள்ளைகளுக்கு எழுதக்கூடாது. அந்த பிள்ளை அவுங்க வீட்டுல சொன்னா, சண்டைதான் வரும்” என்றார்.

என்னை எழுத்துக்கூட்டி எழுதத்தூண்டிய தினத்தந்தியின் கன்னித்தீவும், ஆண்டிப் பண்டாரத்தின் பாடல் வரிகளையும் மறக்கமுடியாது. அப்போ எழுதப் பழகிய கைகள் இன்றுவரை எழுதிக் கொண்டே இருக்கிறது. மன்னிக்கவும் டைப் செய்துகொண்டே இருக்கிறது… ஆனால், எழுதிய எதையும் நான் எழுதவில்லை என்று சொல்லும் அளவுக்கு கோழையாகவும் இல்லை. பொய் எழுதும் அளவுக்கு போலியாகவும் இல்லை என்பதே எனது சந்தோஷம்.

என்னை எழுத்துக்கூட்டி படிக்க உதவிய தினத்தந்தியின் கன்னித்தீவு 22 ஆயிரம் நாட்களாக தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது. சிந்துபாத்தும், லைலாவும் கன்னித்தீவை அடைய போராடிக் கொண்டிருக்கிறார்கள். மந்திரவாதி மூஸா அவர்களை பலவாறு தடுத்துக்கொண்டே இருக்கிறான். சிந்துபாத்தின் பயணம் எப்போது முடிவுக்கு வரும் என்றே தெரியவில்லை. ஆனால், நான் இந்த உலகில் வாழ்ந்ததற்கு அடையாளமாக ஏராளமான நூல்களை எழுதி விட்டுச் செல்கிறேன் என்பதே மகிழ்ச்சி. •

Leave A Reply