சில பார்ப்பன பொய்களின் பின்னணியில் உள்ள நிஜங்கள்!

Share

சட்டசபையில் பலர் முன்னிலையில் தன் சேலையைக் கிழித்து, மானப்பங்கப்படுத்தினார் துரைமுருகன் என கண்ணீர் மல்க தலைவிரிக் கோலத்துடன் பேட்டி கொடுத்தார் ஜெயலலிதா!

அதை அவர் புகாராகவும் கொடுக்கவில்லை, அந்த பேட்டிக்கெதிராக துரைமுருகன் அவதூறு வழக்கும் தொடுக்கவில்லை. எனில் ஜெயலலிதா சொன்னதுதான் உண்மையா?

அப்படியிருந்திருந்தால் அதன் பின் அசுரபலத்துடன் ஆட்சிக்கு வந்த ஜெயாவால், துரைமுருகனை பழி தீர்த்திருக்க முடியாதா? அல்லது துரைமுருகனால்?

பெண் என்பதால் அதை ஓர் ஆயுதமாக ஜெயலலிதா உபயோகித்துக் கொண்டார். அதைவைத்து எதிரியை வீழ்த்தியதும் அதை மறந்தார்!

ஜெயலலிதா மீதான ஊழல் புகார்களை விசாரிக்க அனுமதி கொடுத்துவிட்டார் அப்போதைய ஆளுநர் சென்னாரெட்டி.

உடனே மறுநாள் அதே சட்டசபையில், அதே ஜெயலலிதா, இம்முறை முதல்வராக, “சென்னாரெட்டி யோக்கியமா? என்னிடம் தகாத முறையில் நடந்துக் கொண்டவர்தானே?” என்று அதே கண்ணீர் மல்க பேசினார்.

சட்டசபையே கிளம்பி கிண்டி ராஜ்பவனுக்கு போய் சென்னாரெட்டியை, ப்ரட்ஹல்வா செய்ய ரொட்டியைப் பிய்த்துப் போடுவது போல போடத் துடித்துக் கொண்டிருந்தது!

தனக்கெதிராக ஆணையிட்ட சென்னாரெட்டி தகாதமுறையில் நடந்துக்கொண்டார் எனப் பழிவாங்க அவர் அதை வழக்காகவும் பதியவில்லை, சென்னாரெட்டியும் மானநட்ட வழக்கேதும் ஜெயாவுக்கெதிராக சாகும்வரை போடவில்லை!

எனில், சென்னாரெட்டி தகாதமுறையில்தான் நடந்துக் கொண்டிருப்பாரோ?

இதுபோல் கலைஞர், ஸ்டாலின், உதயநிதி மீது எத்தனை பொய்க்கதைகளை சிறுவயதிலிருந்து இன்றுவரை கேட்டு வருகிறோம்?

குஷ்புவை கலைஞருடன் இணைத்து கொச்சையாக கார்ட்டூன் வரைந்தார் கருத்துரிமை, எழுத்துரிமை மிக்க ஓவியக்கலைஞர் ஒருவர். அவர் மீது கலைஞரும் வழக்கு தொடுக்கவில்லை, குஷ்புவும் தொடுக்கவில்லை. எனில் அது உண்மையாகிவிடுமா?

பெண்கள் விஷயத்தில் ஆண்கள் 99/100 பேர் தவறானவர்கள்தான். துல்லியமாகச் சொல்ல வேண்டுமெனில் 999/1000 பேர். அதனால் ஒரு பெண் துணிந்து புகாரை வெளியில் சொல்லிவிட்டாலே அது 100% உண்மையாகத்தான் இருக்கும், அவளைத் துருவி துருவி கேள்விகள் கேட்காதே எனப் பெண்கள் அனைவரும் ஒரே அணியில் ஒன்று சேர்ந்துவிடுகிறீர்கள், மகிழ்ச்சி. ஆண் திமிரை ஒடுக்க இதுதான் சிறந்த வழியும் கூட!

ஆனால்;

ஆனால் என்று கேட்பதைக் கூட வெறுப்பதுதான் எரிச்சலாக இருக்கிறது!

தகவல் தொழில்நுட்பத் துறை முன்னாள் அமைச்சர் அதிமுகவின் மணிகண்டன் மீது பாலியல் துன்புறுத்தல், மிரட்டல், ஏமாற்றுதல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதியப்பட்டிருப்பதை அறிந்திருப்பீர்கள்!

இத்தனைக்கும் அந்தப் பெண் ஐந்து வருடங்கள் அவரோடு இணக்கமாக அவர் மணமானவர் என்று தெரிந்தும் வாழ்ந்ததாகச் சொல்கிறார். தன்னை அவர் புறக்கணிக்கத் துணிகிறார் எனத் தெரிந்தவேளையில் மணக்கச் சொல்கிறார் அல்லது உரிய வாழ்வாதாரப் பணத்தைக் கோருகிறார். அமைச்சராக அதிகாரத்தில் போன மாதம் வரை அந்தாள் இருந்ததால் அவர் இதை காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றிருக்க முடியாது. பொழுதிற்காகக் காத்திருந்தார். பொழுது இப்போது கனிந்தது!

அதே டிமாண்டை செய்தபோது, மணிகண்டன் மிரட்டுகிறார். உனக்கு கோடிகளைக் கொட்டிக் கொடுப்பதற்கு பதிலாக ஒரே ஒரு லட்சம் கொடுத்தா உன்னைத் துண்டு துண்டாக வெட்டிப் போட ஆட்கள் இருக்கு என்கிறார். அவ்வளவுதான் நேராக காவல் நிலையம் வந்துவிட்டார்!

இதோ புகார்கள் பதியப்பட்டு மணிகண்டன் எப்போது வேண்டுமானாலும் கைதாகக் கூடியச் சூழல்!

மாறாக இப்போதும் இயங்கிக் கொண்டிருக்கும் Me Too வில், அவர் புகாரளித்திருந்தால் என்னவாகியிருக்கும்?

வைரமுத்துவை ஒரு கூட்டம் கறுவியதைப் போல, மணிகண்டனுக்கும் ஒரு கூட்டம் கறுவியிருக்கும். ஆனால் அந்தாளுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிட்டும், மீண்டும் அந்தாள் அமைச்சராகலாம், மேலவை எம்பி ஆகலாம். மீ டூ புகார் கொடுத்தவர் அவர் அப்படி ஆகும் நேரமெல்லாம் இங்கு புலம்புவதில் என்ன பயன்? என்னை வஞ்சித்தார் அவருக்கு பதவியைக் கொடுக்காதே என்று இங்கு சொல்லிவிட்டால் அதை நம்பி, அவர்கள் எதுவும் தராமல் புறக்கணித்து தண்டித்து விடுவார்களா?

ஆண்டாள் தேவதாசியாக இருந்திருக்கலாம் என்கிற மேற்கோளை வைரமுத்து எழுதியவுடன், ஒட்டுமொத்த பார்ப்பன / பார்ப்பனீயக் கூட்டம் வைரமுத்துவுக்கு எதிராக கொதித்தெழுந்தன. நம் வாழ்க்கையில் முதன்முறையாக அக்ரஹாரத்திலிருந்து அரைகுறை ஆடையுடன் ஆண்களும், மடிசார் பெண்களும் களத்திலிறங்கி போராட முன்வந்ததை அதிர்ச்சியுடன் பார்த்தோம்!

நான் யாரையும் இழிவாகவோ, தரக்குறைவாகவோ பேசியதில்லை என நேற்று கூடப் புழுகிய எச்.ராஜா, வைரமுத்துவின் தாயாரைத் தாசி, வேசி எனப் பகிரங்கமாகப் பேசினார்!

அது என் கருத்து அல்ல. இரு ஆராய்ச்சியாளர்கள் சொன்னதை மேற்கோள்தான் காட்டினேன். எனினும் அந்த வார்த்தை பல்லாயிரம் பேர் மனத்தைப் புண்படுத்தியதால் அதற்காக வருந்துகிறேன், அந்த வார்த்தையைத் திரும்பப் பெறுகிறேன் என்று வைரமுத்து அறிக்கை, காணொலி மூலமாகச் சொன்ன பின்னரும், அவர் மீது நூற்றுக்கணக்கான வழக்குகள் இதற்காகத் தொடுக்கப்பட்டன!

அந்தக் கொதிநிலையின் போதுதான் மீ டூவைச் சாக்காக வைத்து இந்தக் குற்றச்சாட்டை சின்மயி முன்வைத்தார். அந்த நெருடல் என்னைப் போன்ற வைரமுத்து ரசிகர்களுக்கு என்றுமே போகாது!

சின்மயியுடன் இணைந்து இன்னும் பல பெண்களும் (அதில் பெரும்பாலோர் தன் பெயரை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை) வைரமுத்து மீது மீ டூவில் மட்டுமே புகாரளித்தனர்!

அன்றே வைரமுத்துவிடமும் இதற்கான விளக்கங்கள் கேட்கப்பட்டன.

கலையுலகின் 40 வருட நெடும்பயணத்தில், உச்சாணிக் கொம்பில் வளைய வந்த ஒரு மனிதர்;
கண்ணதாசன் போலவோ, வாலி போலவோ, இதர சில பாடலாசிரியர்கள் போலவோ, மது, புகை, போதை வஸ்துகளைத் தீண்டாத மனிதர்;

உடலை ஒழுக்கமாக பயிற்சிகள் செய்தும், உணவுக்கட்டுப்பாடுகள் மிகுந்தும் பேணுபவர் என்கிற கட்டமைப்பில் வாழ்ந்தவர் திடுமென அது நொறுங்கிச் சரியும்போது;

சரி, என்னால் பாதிக்கப்பட்டவர்கள் உரிய முறையில் எங்கு புகாரளிக்க வேண்டுமோ அங்கு அளிக்கட்டும். நானும் என் விளக்கங்களை அங்கேயே சொல்லிவிடுகிறேன். அதுதான் சரியானதும் கூட. இங்கொன்று, அங்கொன்று எனச் சொல்லவும் வாய்ப்பிருக்காது. போக, அங்கு நான் சொல்பவைகள் யாவுமே மறைக்கப்படாமல் உங்களுக்கும் தெரியத்தானே போகிறது ? அப்போது தெரிந்துக் கொள்ளுங்கள்!

இதை வைரமுத்து சொல்லி மூன்றாண்டுகள் கழிந்துவிட்டன!

தேசிய மகளிர் ஆணையத்தில் தான் புகாரளித்துவிட்டதாகவும், தங்களை மட்டும் பலமுறை அந்த ஆணையம் விசாரித்துச் சென்றதாகவும் சின்மயி சொல்கிறார்!

புகாரளித்தவரிடமே மீண்டும் மீண்டும் விசாரிக்க ஓர் ஆணையம் எதற்கு ? அதன் அதிகார வரம்புகள்தான் என்ன ? அந்த ஆணையம் வைரமுத்துவை விசாரித்ததா – இல்லையா?

குறைந்தபட்சம் ஓர் ஆர்டிஐ போட்டாவது பெண்கள் அமைப்பு இதை கேட்கக் கூடாதா?

அட, இந்த வழக்கைத் துரிதமாக விசாரிக்க என்னங்க தடை என்றாவது தேசிய மகளிர் ஆணையத்தை நீதிமன்றம் மூலமாகவேனும் நீங்கள் நெருக்கலாமே? சின்மயிக்கு நீதியைப் பெற்றுத் தருவதில் உங்களுக்கு ஏன் இவ்வளவு அலட்சியம்?

பாதிக்கப்பட்ட மகளிருக்காக இயங்கும் ஓர் ஆணையத்தைக் கட்டுப்படுத்துமளவுக்கா வைரமுத்து அதிகாரப் பின்புலமுள்ள ஆள் என நீங்கள் நம்புகிறீர்கள்?

அவரைத் துளி கூடச் சகிக்காத சங்கிகளின் ஆட்சிதானே இந்த மூன்று வருடங்களாக மேலும், கீழும் நடந்துக் கொண்டிருந்தன?

கலைஞருடனும், இதோ இப்போது ஸ்டாலினுடனும், நாளை உதயநிதியுடனும் ஒட்டி உறவாடப் போகும் வைரமுத்துவை இழிவுபடுத்துவதன் மூலம், இந்த மூவரையும், ஒட்டுமொத்த திமுக, திராவிட இயக்கங்களையே கீழ்மைபடுத்திவிட முடியுமென அவர்கள் உணரவில்லை என்றா நம்புகிறீர்கள்?

எங்கோ முன்னாள் ஊராட்சி மன்றக் கவுன்சிலர் (மொத்தமா 200 வாக்கு வாங்கி ஜெயிச்சிருப்பார்) கடன் வசூலுக்காகப் பெண்ணை அடித்துவிட்டார் என்றால்;

அதை ஸ்டாலின் தூண்டிச் செய்ததாய் நம்பி அல்லோகல்லோலப்படும் இந்த ஊரில், வைரமுத்துவை வீழ்த்தினால் அது எவ்வளவு பெரிய வெற்றி? இதோ முந்தா நேத்து திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் வரைக்குமா காத்திருப்பார்கள்?

திரும்பத் திரும்ப,
நீ புறக்கணி,
நீ நிராகரி,
நீ கைவிடு,
நீ பேசாத,
நீ அழைக்காத,
நீ சந்திக்காத,
நீ மேடை ஏத்தாத,

நீ விருது கொடுக்காத என்று இவைகளை மட்டும் அவருக்குத் தண்டனையாக ஆயுள் முழுக்கக் கொடு என எங்களையெல்லாம் இயக்குவது எவ்வளவு பெரிய அக்கிரமம்?

இப்ப அதையும் ஒரு படி தாண்டி, நாட்டில் எந்த அட்டூழியம் நடந்தும் அதைக் கனிமொழியோ, ஸ்டாலினோ தட்டிக் கேட்டுட்டா, நானும் சொன்னேனே எனக்கு என்ன கேட்ட? என்று இதைத் தூக்கிக் கொண்டு, நிகழ்கால அட்டூழியங்களை மடைமாற்றுவது நியாயமா?

ஒட்டுமொத்தப் பெண்களும், திடுக் வைரமுத்து ஹேட்டர்களும் இதற்குப் பலியாவது எவ்வளவுப் பெரிய பின்னடைவு?

நான் வைரமுத்து செய்ததாகச் சொல்லப்படும் எந்தச் சீண்டல்களுக்கும் ஆதாரங்கள் கேட்கவில்லை.
புகாரளிக்கவும் சொல்லவில்லை.

குறைந்தபட்சம், துணிந்து அளித்திருக்கும் புகாரை உந்தித் தள்ளி, வைரமுத்துவை விசாரணைக்கேனும் உட்படுத்துங்கள் என்றுதான் கோருகிறேன்?

இப்படி எழுதியவுடன் அவனையும் வைரமுத்துவுடன் சேர்த்து கரித்துக்கொட்டிவிட்டால் உங்கள் சீற்றம் வடிந்து விடுமா? சின்மயியின் புலம்பல்களை ஒரு கூட்டம் உபயோகித்துக் கொண்டிருப்பதை அறியாதவர்களா நீங்கள்?

வைரமுத்துவை உதறிவிட்டுவிட்டால், நம்மை இனி அவர்கள் நோண்டவே மாட்டார்கள் என்று இன்னொரு கூட்டமும் உங்களோடு சேர்ந்து புதைசேற்றுக்குள் போகிறதே, இவ்வளவு அறிவார்ந்தச் சூழலிலும்?
எவ்வளவு பெருவீழ்ச்சி?

-Raja Rajendran

Leave A Reply